தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 2) சுகாதாரத் துறை சார்பில், ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம்கள் நடத்தப்படும்.
40 வயதுக்கும் மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிப்புடையோர், இதய நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகியோருக்கு இந்த முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை, அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.
கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்டும். மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே (X-Ray), எக்கோகார்டியோகிராம்(Echocardiogram), அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (USG) மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படும்.
இந்த முகாமிலேயே முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை சென்னை சாந்தோமில் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நேற்று முன் தினம் தலைமை செயலகம் சென்று வழக்கமான பணிகளை மேற்கொண்டேன். அப்போது எனது செயலாளர்கள் வெளி நிகழ்ச்சிகளை எல்லாம் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கலாமே என்று கேட்டனர். ஆனால் மக்களைச் சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் வரும். என்னுடைய உடலில் நோய் இருந்தாலும் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டேன்.
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு நான் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. நான் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தமிழக அரசு மிகுந்த நெருக்கடியில் இருந்தது. நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி செயல்பட்டோம்.
இன்றுஅமைச்சர்கள் எல்லாம் மீண்டும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்களாக மாறி அவரவர் மாவட்டங்களில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர்” என்றார்.
மேலும் அரசின் திட்டங்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின், “மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகளாக பார்க்காமல் மருத்துவப் பயனாளிகளாக மார்க்க வேண்டும் வேண்டும். மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக் கொள்வது போல் அக்கறையுடன், பரிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
