சூப்பர்குட் சுப்பிரமணியின் புகழ் சொல்லும் ‘ஓம் வெள்ளிமலை’!

Published On:

| By uthay Padagalingam

வெள்ளந்திக் குணத்தைக் காட்டுகிற அப்பாவித்தனமான முகம், வயதுக்கென்று அனுபவமுண்டு எனச் சொல்கிற உடல்மொழி, ’திரையில் தெரிவது இந்த அளவுக்கான நடிப்புதான்’ என்பது போன்ற பாவனைகள் என்று தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு துணை நடிகராக இயங்கி வந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. ’ஐம்பதுகளைத் தொட்ட அல்லது தாண்டிய குணசித்திர பாத்திரங்களில் இவரை நடிக்க வைக்கலாம்’ என்கிற அளவுக்குத் திரையுலகில் பெயரைச் சம்பாதித்தவர். praise of the supergood Subramani

’சினிமாவுல ரொம்ப காலம் ஒரே தொழிலை செஞ்சிட்டு அப்படியே ரிட்டயர்டு ஆகி வீட்ல உட்கார்ந்துரணும்’ என்றெண்ணும் சிலருக்கு மத்தியில், திரையுலகோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்க வேண்டுமென்று தொடர்ந்து உழைத்து வந்தவர்களில் ஒருவர் சூப்பர்குட் சுப்பிரமணி. ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகம் சார்ந்த பணிகளைச் செய்து வந்தவர். அதன் காரணமாக, அந்த நிறுவனப் பெயர் இவரோடு ஒட்டிக்கொண்டது.

தொண்ணூறுகள் தொடங்கி 2010 வரை, தயாரிப்பு நிர்வாகம் சார்ந்தே சுப்பிரமணி இயங்கி வந்திருக்கிறார். அதன்பிறகே, மெல்ல நடிப்பு பக்கம் இவரது கவனம் முழுமையாகத் திரும்பியது.

praise of the supergood Subramani

சுப்பிரமணியபுரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் ஏற்கனவே தலைகாட்டியபோதும், சூப்பர்குட் சுப்பிரமணியைத் தனித்து அடையாளம் காட்டியது ‘முண்டாசுப்பட்டி’. அதில் கிராமத்து பூசாரியாகக் குறி சொல்கிற பாத்திரத்தில் தோன்றியிருந்தார். இயக்குனர் ராம்குமார் தந்த அந்த அடையாளம், அதே போன்று பல படங்களில் அவர் இடம்பெறக் காரணமானது.

தொடர்ந்து பிசாசு, நண்பேண்டா, ரஜினி முருகன், மாப்ளசிங்கம், திருநாள் என்று பல படங்களில் நடித்தார் சூப்பர்குட் சுப்பிரமணி. அவற்றில் பல போலீஸ் பாத்திரங்கள் தான். குறிப்பாக, வயதான கான்ஸ்டபிளாக அதிக படங்களில் தோன்றியிருக்கிறார். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ அதில் குறிப்பிடத்தக்க ஒன்று.

ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, லத்தி சார்ஜ், வாரிசு, மகாராஜா, பரமன் என்று சமீப ஆண்டுகளில் பல படங்களில் கவனிக்கத்தக்க பாத்திரங்களில் நடித்திருக்கிறார் சூப்பர்குட் சுப்பிரமணி. நவம்பர் ஸ்டோரி, செங்களம் ஆகிய வெப்சீரிஸ்களில் இடம்பெற்றிருக்கிறார். சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கலாம் என்று உணர்த்துகிறது அவரது பிலிமோகிராஃபி.

’காடப்புறா கலைக்குழு’வில் முனீஸ்காந்த் உடன் முண்டியடிக்கிற ஒரு பாத்திரத்தில் ‘காமெடி’ செய்திருந்தார். கொஞ்சம் பெரியளவில் தயாரிக்கப்படுகிற திரைப்படங்களில் இரண்டொரு காட்சிகளில் நடித்தவர், சில சிறிய பட்ஜெட் படங்களில் மிகப்பெரிய பாத்திரங்களில் திறம்பட நடித்திருக்கிறார். அதற்கொரு உதாரணம் ‘ஓம் வெள்ளிமலை’.

2023ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் பெரியளவில் ரசிகர்களின் கவனத்தைக் குவிக்கவில்லை. ஆனால், அந்தப் படத்தின் ஆக்கமும் சூப்பர்குட் சுப்பிரமணியின் நடிப்பும் அதில் சொல்லிக்கொள்ளும்படியாக அமைந்திருந்தன.

அந்தப் படத்தில் அவர் ‘நாட்டு வைத்தியர்’ வேடத்தில் நடித்திருந்தார். வழக்கம்போல, நகைச்சுவைக் காட்சிகளில் மிகை நடிப்பைத் தந்தபோதும் இதர காட்சிகளில் மிகச்சரியான அளவில் நடித்து நம் கண்களில் நீர் கோர்க்க வைத்திருந்தார். அது போன்ற வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையாதது காலம் செய்த கோலம்.

ஆனாலும், தனக்குக் கிடைக்காத வரவேற்பை எண்ணித் துவண்டு விடாமல் தொடர்ந்து திரையுலகில் பயணித்திருக்கிறார் சூப்பர்குட் சுப்பிரமணி. அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரக் காத்திருப்பதே அதற்குச் சாட்சி.

தொடர்ச்சியாக உழைப்பில் கவனம் செலுத்தி, உடல்நலத்தில் கோட்டை விட்ட எத்தனையோ திரைக்கலைஞர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் சூப்பர்குட் சுப்பிரமணி. கனவுகளைச் சுமந்துகொண்டு தினம் தினம் படப்பிடிப்பு நடக்கிற திசை நோக்கி நடை போடுகிற எத்தனையோ ஆயிரம் கலைஞர்களுக்கான ‘பாடம்’ அவரது வாழ்வில் பொதிந்திருக்கிறது. அவருடன் பழகியவர்கள், பணியாற்றியவர்கள் அது பற்றிச் சொல்கையில் இன்னும் பல விரிவான தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம்.  

எல்லா மனிதர்களையும் போல, சூப்பர்குட் சுப்பிமணியின் மனதிற்குள்ளும் ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும். அவற்றில் எத்தனை ஈடேறின என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும், அவரை ஒரு சிறந்த திரைக்கலைஞனாக நம் முன்னே நிறுத்த ‘ஓம் வெள்ளிமலை’ போன்ற சில படைப்புகள் இருக்கின்றன. praise of the supergood Subramani

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share