பதுங்கியிருந்த கொள்ளையர்கள் : என்கவுண்டர் செய்த போலீஸ்!

By Balaji

|

Published on 11 Oct 2021, 12:00 AM

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் ஒருவரிடம் செயினை பறித்து கொண்டு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னளூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (அக்டோபர்10) வழக்கம்போல் இவர் பணிக்கு வரும்போது வடமாநில கொள்ளையர்கள் இருவர் இந்திராணியிடம் வழி கேட்பது போல், நாடகமாடி அவரிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

ADVERTISEMENT

பயத்தில் இந்திராணி சத்தமிட்டார். இவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், கொள்ளையர்களை சிறிது தூரம் விரட்டி சென்றனர்.

அப்போது, வடமாநில கொள்ளையர்களில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், பொதுமக்கள் பயந்துபோய் பின்வாங்கினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட , கொள்ளையர்கள் மக்களிடமிருந்து தப்பி பென்னளூர் ஏரி அருகே உள்ள காட்டுக்குள் ஓடி பதுங்கி கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்யபிரியா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

ADVERTISEMENT

கொள்ளையர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்ததால், அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஐந்து ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இன்று கண்ணில்பட்ட கொள்ளையர்களில் ஒருவரான முர்தஷா என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் தலைமை காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய என்கவுண்டரில் முர்தஷா உயிரிழந்தார்.

கொள்ளையர்களில் மற்றொருவரான நஹிம் அத்தர் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முர்தாஷாவின் உடல் உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, நகை, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கொள்ளையர்கள் இருவருமே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

**-வினிதா**


உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel