தம் மீதான போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா முன்னாள் முதல்வரான பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது.
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு
2024 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எடியூரப்பா மீது புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு ஒன்றில் உதவி கேட்டு தாயுடன் போன சிறுமிக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது புகார்.
இப்புகாரின் அடிப்படையில், பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ, 204, 214 ஆகிய பிரிவுகளின் கீழ் எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வுக் குழு CID விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் முக்கிய சாட்சியான, புகார் அளித்த சிறுமியின் தாய் கடந்த ஆண்டு மே மாதம் நுரையீரல் புற்றுநோய் காரணமாக திடீரென உயிரிழந்தார்.
இந்த நிலையில், தம் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் எடியூரப்பா புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. அருண் நேற்று நவம்பர் 13-ந் தேதி விசாரித்தார். அப்போது, போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் ஏற்கனவே கூறிய நிலையில் ஏன் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எடியூரப்பா, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
