ADVERTISEMENT

SIR: தமிழகத்தில் 81.37% படிவங்கள் விநியோகம்- தேர்தல் ஆணையம்! CPI மறுப்பு!

Published On:

| By Mathi

ECI SIR Tamil Nadu

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக 81.37% விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன்படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,95,26,685 கணக்கெடுப்பு படிவங்கள் (99.91%) அச்சிடப்பட்டு 42,18,16,210 கணக்கெடுப்பு படிவங்கள் (82.71%) இதுவரை (2025 நவம்பர் 13) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,093 வாக்குச் சாவடி அலுவலர்கள், 10,41,291 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5,21,73,087 படிவங்கள் (81.37%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையமானது 50% படிவங்கள கூட தமிழகத்தில் விநியோகிக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் CPI தமிழ் மாநிலக் குழு குற்றம் சாட்டியுள்ளது. CPI தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், பத்து நாட்கள் கடந்து விட்ட நிலையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவங்கள் 78.09 சதவீத வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக நேற்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வியப்பளிக்கிறது. ஒரு வேளை வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வரையிலும் படிவங்கள் சேர்ந்திருக்கலாம்; இத்துடன் தேர்தல் ஆணையம் தனது கடமை முடிந்து விட்டதாகக் கருதுவது துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைமுறைக்கும் உதவாது என்பதுடன், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ADVERTISEMENT

அரசியல் கட்சிகள் நியமனம் செய்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தரும் தகவல்படி, இன்னும் 50 சதவீத வாக்காளர்களுக்குகூட கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்படவில்லை என்பதை கள நிலவரங்கள் உறுதி செய்கின்றன. அத்துடன் வழங்கப்பட்டுள்ள படிவங்களில், கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்வதில் போதுமான பயிற்சி இல்லாததால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், வாக்காளர்களும் திணறி வருகின்றனர் என்பதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share