பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இருவரும், இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமான இன்று (செப்டம்பர் 17) போட்டி போட்டு 50 கார்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியதால் திண்டிவனத்தில் பதற்றம் ஏற்பட்டது.
1987-ம் ஆண்டு வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகியவற்றில் 25 வன்னியர்கள் உயிரிழந்தனர். இதனால் செப்டம்பர் 17-ந் தேதியை தியாகிகள் தினமாக பாமக கடைபிடித்து வருகிறது.
பாமகவில் தற்போது அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு, அக்கட்சியே இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் திண்டிவனம், வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தை உரிமை கொண்டாடுவதில் சில நாட்களுக்கு முன்னர் அப்பா- மகன் கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த அலுவலகமே சீல் வைக்கப்பட்டுவிட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் காலை 9 மணிக்கு அவரது மகளும் பாமக நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீகாந்தியுடன் 50 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க சித்தனை, பாப்பனாம்பட்டு, பணையாபுரம், கோலியனூர், கடலூர் மாவட்டம் கொள்ளைக்காரன் குட்டை ஆகிய ஐந்து இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார் டாக்டர் ராமதாஸ்.
அப்பா ராமதாஸுக்கு போட்டியாக மகன் அன்புமணி,
திண்டிவனம் JVS திருமணம் மண்டபத்தில் இன்று காலை 10.45 மணிக்கு இடஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அன்புமணியும் முற்பகல் 11.00 மணிக்கு 50 கார்கள் அணிவகுக்க ராமதாஸ் சென்ற இடங்களுக்கே சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்பாவும் மகனும் போட்டி போட்டு திண்டிவனம், கடலூரில் நடத்திய கார் அணிவகுப்பு ஊர்வலத்தால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க 500க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.