பாகிஸ்தானுடனான போர்ச் சூழல் தணிந்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற இருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் மீதான Operation Sindoor ராணுவ நடவடிக்கை, அமெரிக்கா தலையீட்டால் போர் நிறுத்தம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு தமது உரையில் விளக்கம் அளிக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் பலியாகினர். இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை அறிவித்தது மத்திய அரசு. பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து Operation Sindoor என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்.
இதற்கு பதில் தரும் வகையில், ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான எல்லை மாநிலங்கள் மீதும் ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தத் தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தன. இதனால் தற்போதைய நிலையில் தாக்குதல்கள் நடைபெறாமல் அமைதி நிலவுகிறது.
அதேநேரத்தில், Operation Sindoor ராணுவ நடவடிக்கையை இந்தியா திடீரென நிறுத்தியது, இந்தியா- பாகிஸ்தான் விவகாரம்- ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீட்டை அனுமதித்தது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில்தான் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். பிரதமர் மோடி தமது உரையில் பஹல்காம் தாக்குதல் முதல் போர் நிறுத்தம் வரையிலான நிகழ்வுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.