முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சை கண்டித்து இன்று (மே 12) தமிழகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Sellur Raju controversial speech
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டு பெயரில் தாக்குதல் நடத்தியது.
மே 7 ஆம் தேதி முதல் இன்று வரை உயிரை பணயம் வைத்து எல்லையில் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் தான் கடந்த 10ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லையில் ராணுவ வீரர்கள் என்ன சண்டையிட்டார்கள், அதி நவீன கருவிகளை பிரதமர் மோடி வாங்கி கொடுத்திருக்கிறார். ராஜ்நாத், அமித்ஷா ஆகியோர் தான் எதிரிகளை எப்படி தாக்குவது என சொன்னார்கள். எனவே பாராட்ட வேண்டியது பிரதமரைத்தான். ஆனால் மோடியை பாராட்டாமல், ராணுவ வீரர்களுக்காக பேரணி போவதாக திமுக சொல்கிறது” என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி கண்டனத்துக்கு உள்ளானது. Sellur Raju controversial speech
இதையடுத்து செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம ராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு. நேற்று, இன்று, நாளை என எப்போதும் ராணுவ வீரர்களை மதிக்கிறேன். எங்க குடும்பமே முன்னாள் ராணுவ வீரர்களை கொண்டது” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் செல்லூர் ராஜூவுக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்திருந்தார். செல்லூர் ராஜூ மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தசூழலில் வேதாரணியத்தில் செல்லூர் ராஜூவை கண்டித்து இன்று (மே 12) முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பிய முன்னாள் ராணுவ வீரர்கள், செல்லூர் ராஜூ தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் . Sellur Raju controversial speech
