தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் நடிகர் விஜய்யை தொலைபேசியில் அழைத்து பேசியதாக வெளியான செய்திகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் அருகே சென்றாயப் பெருமாள் கோவிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 12) கூறியதாவது: அதிமுக கூட்டங்களில் பங்கேற்க, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையின் ஆணையைப் பெற்று வர வேண்டும் என எங்களது மாவட்ட செயலாளர்கள், அந்த கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் தவெக நிர்வாகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
இதை எதிர்க்கட்சியினர் திட்டமிட்டே விமர்சனம் செய்கின்றனர்.. அவர்களால் பொறுக்க முடியவில்லை.. பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் எங்களைத்தான் எதிர்க்கட்சிகள் (திமுக கூட்டணி) விமர்சிக்கின்றன.
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு (திமுக கூட்டணிக்கு) என்ன? அவர்கள் திமுக தலைமையில் கூட்டணியாக இருக்கின்றனர். அப்படி கூட்டணி வைத்துவிட்டு எங்கள் கூட்டணியை பற்றி ஏன் விமர்சிக்க வேண்டும்?
அதிமுகவுக்கு வலிமையான கூட்டணி இல்லை என்றால் எளிதாக ஜெயித்துவிடலாம் என நினைக்கின்றனர் திமுக கூட்டணி தலைவர்கள்..
அதிமுக- தவெக கூட்டணி அமைந்தால் பாஜகவை கழற்றிவிடுவோம் என டிடிவி தினகரன் சொல்வதையெல்லாம் ஒரு கேள்வியாக கேட்காதீங்க.. அவர் நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா? 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி அதிமுக.. அதற்கு ஏற்ப செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க வேண்டும்.
அந்த கூட்டணி வருமா? இந்த கூட்டணி வருமா? என்பதெல்லாம் தேர்தல் வரும் போதுதான் தெரியும். தேர்தல் அறிவித்த பின்னர்தான் கூட்டணி இறுதியாகும்.
ராமதாஸுடன் கூட்டணி குறித்து பேசியது பற்றி வெளிப்படையாக அனைத்தையும் சொல்ல முடியாது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் பல பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; ஆட்சியில் பங்கு- அதிக இடங்களைக் கேட்கின்றனர் காங்கிரஸ். இப்படி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை தொலைபேசியில் அழைத்து பேசவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.