கோவையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 27) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், கோவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை எனவும் பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, கோவை தேர்தல் நடத்தும் அலுவலரும், அம்மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி வெளியிட்ட அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கும் பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிடும்போதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் தான் கோவையிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், கோவையில் பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் வாக்களிக்க முடியவில்லை என பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள சுதந்திர கண்ணன் என்பவர் இன்று (ஏப்ரல் 27) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், “2019 மற்றும் 2021 தேர்தலில் வாக்களித்தவர்களில் பலரது பெயர்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் வாக்களிக்கும் வரை கோவை தொகுதியில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தொகுதியில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்ககோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’யானை பசிக்கு சோளப்பொரியா?’ : மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
ஆந்திரா ரயில் விபத்து : ரயில்வே அமைச்சர் கூறியது பொய்… விசாரணையில் அம்பலம்!
Comments are closed.