நடிப்பு அரக்கன் ஆக மாறிய கவின்… ஸ்டார் டிரைலர் எப்படி?
டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் தயாராகி உள்ள படம் “ஸ்டார்”. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குநர் இளன் தான் “ஸ்டார்” படத்தை இயக்கியுள்ளார்.
ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், புரோமோ வீடியோக்கள் மற்றும் பாடல் வீடியோ ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் கவின் பெண் வேடத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27ஆம் தேதி) ஸ்டார் படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டுள்ளது.
ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் தொடர்ந்து பல முயற்சிகளை செய்யும் கவினுக்கு வாழ்க்கையில் காதல் தோல்வி, பண பிரச்சனை, குடும்ப சூழ்நிலை, சினிமாவில் நிராகரிப்புகள் என பல பிரச்சனைகள் ஏற்பட விரக்தியின் உச்சத்தில் கிடைத்த வேலையெல்லாம் செய்து கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி போராடிக் கொண்டிருக்கும் கவின் இறுதியில் சினிமாவில் ஒரு ஸ்டார் ஆனாரா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.
ஸ்டார் படத்தின் டிரைலரின் இறுதி காட்சியில் மொட்டை அடித்துக் கொண்டு முகத்தில் தழும்புகளுடன் கண்ணாடி முன் நின்று கதறி அழும் கவினின் நடிப்பு பிரமாதம்.
இந்த படத்தில் கவினுடன் நடிகர்கள் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் மே 10 ஆம் தேதி ஸ்டார் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் கவின் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!