கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 14வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கூடுதல் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர்.
கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே, 2022- ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகளை தேசிய புலனாய்வு முகமை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், கடைசியாக போத்தனூர் திருமலை நகர், மதீனா அவென்யூ பகுதியை சேர்ந்த தாஹா நசீர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையினை தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் நேற்று (ஏப்ரல் 26) தாக்கல் செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பது தெரிய வந்தது.
தற்போது தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் படி, ஐபிசி வெடிபொருள் சட்டம் மற்றும் யுஏ(பி)ஏ ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தாஹா நசீர் குற்றசாட்டப்பட்டுள்ளார்.
இவர் ஜமேஷா முபீன் மற்றும் பயங்கரவாதத் தாக்குதலின் தலைவரான உமர் பாரூக்கின் நெருங்கிய கூட்டாளி என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோட்டைமேட்டில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலானது, முகமது அசாருதீனை சிறையில் அடைத்ததற்கு பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்தஅசாருதீன் 2019-இல் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தைப் பரப்பியதற்காக கைது செய்யப்பட்டவர்.
மேலும் என்ஐஏ விசாரணையின்படி, குண்டுவெடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பு முகமது தௌஃபீக் மற்றும் தாஹா நசீர் ஆகியோர் ஜமேஷா முபீனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர் மற்றும் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வெடிபொருட்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சதித்திட்டத்தின் பெரிய நோக்கம், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக, அதன் பல்வேறு பிரிவுகளை குறிவைத்து, அதாவது பொது நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை போன்றவற்றை குறிவைத்து, நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காகவும் இந்தியர்களை குறிவைத்து கொன்று குவிப்பதே என்பது தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சூர்யாவுடன் மோதல்… துருவ் விக்ரமுக்கு கதை சொன்ன சுதா கொங்கரா?
சூரியனில் நடந்த தரமான ‘சம்பவம்’!