சேலத்தில் வரும் டிசம்பர் 4ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பின் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் விஜய் ரத்து செய்திருந்தார். இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அப்போது நமது அரசியல் இன்றும் வேகமாக இருக்கும் என்றும், திமுகவிற்கும் தவெகவிற்கும்தான் போட்டி என்றும் தெரிவித்தார். ஆளும் திமுக அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்நிலையில் விஜய் சேலத்தில் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கையில் தவெகவினர் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் டிசம்பர் 4ம் தேதி விஜய் பரப்புரை செய்ய அனுமதி கோரி அக்கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அதில் கோட்டை மைதானம், போஸ் மைதானம் உள்ளிட்ட 3 இடங்களில் ஒன்றில் அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்த நிலையில் விஜய் செப்டம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான 13ம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டது. ஆனால் திருச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அரியலூர் செல்ல நள்ளிரவானது. இதனால் பெரம்பலூரில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 20ம் தேதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பின்னர் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென நாமக்கல் மட்டும் கரூரில் செப்டம்பர் 27ம் தேதி பிரச்சாரம் செய்வதாக அக்கட்சி அறிவித்தது.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்து விட்டு விஜய் கரூர் வந்து பிரச்சாரத்தில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அரசு ஒரு நபர் ஆணையத்தை நியமித்தது. சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
