மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்ட ரத்து நடவடிக்கையை கண்டித்து இன்று (நவம்பர் 20) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில், அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மொத்தம் 39 கி.மீ துாரத்திற்கும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே, 31.93 கி.மீ துாரத்திற்கும், செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
மதுரையில், 11,360 கோடி ரூபாயிலும், கோவையில், 10,740 கோடி ரூபாயிலும், மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை, மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம், 2024 பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டது. பின், மத்திய அரசு கேட்ட கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட அறிக்கை, 10 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் மதுரை மற்றும் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு விதிகளின்படி, மக்கள் தொகை, 20 லட்சத்திற்கு மேலுள்ள நகரங்களில் மட்டுமே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் மக்கள் தொகை, 15.84 லட்சம், மதுரையில், 15 லட்சம் தான்’ உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை மற்றும் மதுரைக்கு நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளது.
அத்துடன், மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பதிலாக, இந்த இரு நகரங்களிலும், தனி பாதையில் பஸ்கள் மட்டுமே இயக்கப்படும், பி.ஆர்.டி.எஸ்., போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மதுரை மற்றும் கோவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தொழில் நகரமான கோவையில் மெட்ரோ திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை தொடங்கி உள்ளன. கோவையில் ஐ.டி துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மெட்ரோ திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தொழில் துறையினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
அதே போல் கோவை மதுரையை விட மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள ஆக்ரா, போபால், பாட்னா, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில் கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை ரத்து செய்வது மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கும் நடவடிக்கை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இதைத்தொடர்ந்து இன்று ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் கோவையில் ஆரப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு இன்று காலை 10 மணிக்கு கழக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
