மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கால நிர்ணயம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது; அதே நேரத்தில் ஒரு மாநிலத்தில் 2 அதிகார மையங்கள் இருக்கக் கூடாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உண்டு- ஆளுநருக்கு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது. மாநிலங்களின் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது 1 மாத காலத்திற்குள்ளும், குடியரசுத் தலைவர் 3 மாத காலத்திற்குள்ளும் முடிவெடுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு மாநில உரிமைகள் வரலாற்றில் மைல் கல்லாகப் போற்றப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவியால் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் காலக்கெடு தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 முக்கிய கேள்விகளை எழுப்பினார். அதில், இப்படி ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர்கள், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் எல்லைகள் என்ன? ஆளுநர்- குடியரசுத் தலைவர் நடவடிக்கைகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளை திரவுபதி முர்மு எழுப்பி இருந்தார். இது தொடர்பான விசாரணையில் பல்வேறு முக்கிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதேநேரத்தில் காலக்கெடு விதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர்ர் கவாய் தலைமையிலான பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- ஆளுநரின் அதிகாரம் என்பது ‘ஆய்வு செய்வதற்காக’ மசோதாவை நிறுத்தி வைத்தல் அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புதல் என்பதுதான்.
- ஆனால் மசோதாக்களை ஆளுநர் நீண்டகாலம், உரிய காரணங்களைத் தெரிவிக்காமல் நிறுத்தி வைப்பது கூட்டாட்சிக்கு எதிரானது; நிதி மசோதாவை தவிர இதர மசோதாக்களை நிறுத்தி வைக்காமல் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்;
- ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் உண்டு.
- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் தான் இருக்கிறது – – – – மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்
அல்லது
ஜனாதிபதிக்கு அனுப்பலாம்
அல்லது
சட்டப்பேரவை திருப்பி அனுப்பலாம்
என்பதுதான் ஆளுநரின் அதிகாரம். இந்த 3-ல் ஒன்றை மட்டுமே ஆளுநர் தேர்வு செய்ய முடியும். - ஆனால் காரணம் எதுவும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
- பொதுவாக மாநில அமைச்சரவை முடிவின் படிதான் ஆளுநர் என்பவர் செயல்பட வேண்டும்.
- ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக் கூடாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது- ஆளுநருக்கு அல்ல.
- -மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும் அமைச்சரவையும்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவை- ஆளுநர் அல்ல.
- மத்திய அரசு கூறுவதைப் போல, ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை.
- ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்புகளும் நீதிமன்றமும் தலையிடத்தான் செய்யும்.
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது
- தமிழ்நாடு அரசு வழக்கில் 2 நீதிபதிகள் பெஞ்ச் ஆளுநர்- குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவிதித்த உத்தரவு அரசியல் அமைப்புக்கு எதிரானது
- ஆளுநர் செயல்படாமல் இருந்தால் நீதிமன்றம்ம் தலையிட அதிகாரம் இருக்கிறது.
- குடியரசுத் தலைவரும் நீண்டகாலம், உரிய காரணமில்லாமல் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தால் நீதிமன்றம் குறிப்பிட்ட வரை தலையிடவே செய்யும்.
