2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்குகிறது. கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என பிரச்சாரம் செய்து வரும் விஜய், இந்த தேர்தலில் இரண்டே இரு கட்சிகளுக்கு மத்தியில் தான் போட்டியே… ஒன்னு டிவிகே இன்னொன்னு டிஎம்கே என கூறிவருகிறார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என முதல் பிரச்சாரத்திலேயே விஜய் கூறினாலும், தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணியில் செல்லவில்லை.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு, மற்ற கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆனால் இன்னும் தமிழக வெற்றிக் கழகம் எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை.
அதேசமயம் அக்கட்சித் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தவெகவினர் கூறுகிறார்கள். முதல்வர் வேட்பாளராக தேர்தலில் நிற்கும் விஜய் , தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள, ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொன்றில் வெற்றி பெறும் வகையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிட இருக்கிறார்.
பெரம்பூரை பொறுத்தவரை, இது தனி தொகுதியாக இருந்து, 2008ல் தொகுதி மறுசீரமைப்பின் போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதுவரை திமுக 9 முறை, மார்க்சிஸ்ட் 3 முறை, அதிமுக 3 முறை, காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்ற தொகுதியாகும். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று 519 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலனை தோற்கடித்தார்.
2021 தேர்தலில் பெரம்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்ற திமுக தீவிரமாக செயல்பட்டது. இதில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 105,267 வாக்குகள் பெற்றார். இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலையில் போட்டியிட்ட தனபாலனை 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இப்படி திமுகவின் கோட்டையாக இருக்கும் பெரம்பூர், சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகும். 1,07,995 ஆண் வாக்காளர்கள், 1,14,726 பெண் வாக்காளர்கள் என மொத்தமாக 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வாக்குகள் உள்ளது. குறிப்பாக இத்தொகுதியில் தவெகவுக்கு 45,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் பெரம்பூர் தொகுதி விஜய்க்கு முதல் சாய்ஸாக இருக்கிறது.
அடுத்தது, திருச்சி கிழக்கு… திருச்சி 1 என அழைக்கப்பட்டு வந்த இந்த தொகுதி, 2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி கிழக்கு என பெயர் மாற்றப்பட்டது. 1984, 1989ல் மலர்மன்னன், 1996, 2001ல் பரணிக்குமார், 2006ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2011ல் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி திருச்சி கிழக்கில் வெற்றி வாகை சூடினார்.
இந்த தொகுதியில் 1,04,883 ஆண் வாக்காளர்கள், 1,12,460 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,17, 397 வாக்காளர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் என தெரிகிறது.
ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்?

இதுபற்றி தவெக தரப்பில் நாம் கேட்டபோது, “ஒரு தொகுதியில் தோற்றாலும், ஒரு தொகுதியில் வென்று சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பதற்காகத் தான் இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது.
தவெக சார்பில் நடத்தப்பட்ட சர்வேயில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இந்த இரு தொகுதியும் விஜய் போட்டியிட டிக் செய்யப்பட்டது.
இதுத்தொடர்பாக நடந்த ஆலோசனையில் தவெக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், எதற்கு இரண்டு தொகுதி… பெரம்பூர் இல்லையெனில், திருச்சி கிழக்கு என ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடட்டும். இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அப்போது இடைத்தேர்தல் வரும். இதனால் ஒரு தொகுதியில் மட்டும் நிற்கட்டும் என்று கூறினார்.
ஆனால் விஜய்க்கு தேர்தல் ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி, இரண்டு தொகுதியிலும் நமக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறது என சர்வே டேட்டா சொல்கிறது. தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி கிழக்கில் போட்டியிடுவது, டெல்டா பகுதிகளிலும் தென் மாவட்டங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பெரம்பூரில் போட்டியிட்டால் மாநிலத்தின் தலைநகரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் இரண்டு தொகுதிகளிலும் நிற்கலாம் என்றார். இதற்கு விஜய்யும் ஓகே சொல்லிவிட்டார்.
அதன்படி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். பெரம்பூர் தொகுதியில் நேரில் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய், திருச்சி கிழக்கிற்கு நேராக செல்ல வேண்டுமா, அல்லது வேறு யார் மூலமாவது வேட்புமனு தாக்கல் செய்ய முடியுமா என மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் இறுதியில் திருச்சி கிழக்கிலும் நேராகவே சென்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளார் விஜய்” என்கிறார்கள்
தமிழக வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற முக்கியத் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா. 1991 சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், சட்ட விதிகளின்படி காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.
2001 சட்டமன்றத் தேர்தலின்போதும், ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை என நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த காரணத்தால், அவரது நான்கு வேட்புமனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பின்னர் 2002 ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார்.
அதுபோன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி, 2019ல் நடந்த எம்.பி தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்ததால், வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.ஆனார்.
2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, ராகுலின் தங்கையும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா, ராகுல் வரிசையில், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தேர்தல் சட்டப்படி (Section 33(7) of RP Act) அனுமதிக்கப்பட்ட ஒரு ‘பாதுகாப்பு உத்தி’ யாகவே பார்க்கப்படுகிறது.
