குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று (ஏப்ரல் 8) தொடங்கியது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடும் வெயிலால் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று அகமதாபாத் சைடஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது உடல் நலன் குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கடும் வெயிலின் காரணமாக நீரிழப்பு (dehydration) ஏற்பட்டது. மருத்துவமனையில் எல்லாச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது நலமாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். P Chidambaram admitted to hospital
ப.சிதம்பரம் மகனும் காங்கிரஸ் எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தையை இதயநோய் நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். P Chidambaram admitted to hospital
இதற்கிடையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கார்த்தி சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ப.சிதம்பரத்தின் உடல் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார்.