ஓபிஎஸ் கேட்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

Published On:

| By Kavi

ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று (ஜூலை 31) விலகினார். அதேசமயம் நேற்று ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலினை இருமுறை சந்தித்து பேசினார்.

இது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “ஏற்கனவே நான் ஓ.பன்னீர் செல்வத்திடம் போனில் பேசியிருந்தேன். என்ன முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. சொந்த பிரச்சினை காரணமா, வேறேனும் பிரச்சினையா என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரைச் சந்திக்க நேரம் வாங்கி கொடுத்திருப்பேன்” என்றார்.

ஈபிஎஸின் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டார் என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT

அவரை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை ஏதேனும் நடக்கிறதா? என்ற கேள்விக்கு, “அவர் அறிவுப்பு வெளியிடுவதற்கு முன்புதான் நான் போனில் பேசியிருந்தேன். எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். டிடிவி தினகரனிடமும் நான் பேசினேன். ஆனால் ஓபிஎஸ் எடுத்தது அவருடைய முடிவு” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் -ஓபிஎஸ் சந்திப்பு குறித்த கேள்விக்கு, “தொகுதி பிரச்சினைக்காகவோ அல்லது சொந்த பிரச்சினைக்காகவோ கூட முதல்வரைச் சந்தித்திருக்கலாம். எல்லோரும் முதல்வரை சந்திக்கலாம். நான் கூட முதல்வரை சந்திக்கலாம். பிரதமர் மீண்டும் தமிழகம் வரும்போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து கேட்டால் சந்திக்க ஏற்பாடு செய்வேன்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share