ஆர்டர் செய்த ஃபிரைட் ரைஸ் வர தாமதம் – ஆத்திரத்தில் காசாளர் மண்டை உடைப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

restaurant incident

திருப்பூரில் உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த ஃபிரைட் ரைஸ் வர தாமதமானதால் ஆத்திரம் அடைந்த நபர் காசாளரின் மண்டையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்ற உணவகத்தில் நேற்று (நவம்பர் 16) இரவு அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த சென்றுள்ளார். அங்கு ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்து நீண்ட நேரமாகியும் அவருக்கு ஃபிரைட் ரைஸ் கொண்டு வரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடுப்பான கௌதம் தனக்கு பிறகு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்டர் செய்து நீண்ட நேரமாகியும் தனக்கு உணவு வழங்கவில்லை என அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த கௌதம் தனது நண்பர்களை செல்போன் மூலமாக அழைத்தார். உடனடியாக அவரது நண்பர்கள் ஆறு பேர் வந்தனர். இதைத்தொடர்ந்து உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்த கௌதம் சமையல் மாஸ்டர், மற்றும் காசாளரை கடுமையாக தாக்கினார். அங்கிருந்த குக்கர் மூடியை எடுத்து தாக்கியதில் காசாளர் ஜாஹிரின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் சேர்ந்து கௌதமை சுற்றி வளைத்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதைக் கண்ட கௌதமின் நண்பர்கள் 6 பேரும் தப்பி ஓடி விட்டனர். வீரபாண்டி காவல்துறையினரிடம் கௌதமை ஒப்படைத்தனர். உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கௌதம் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து உணவகத்தை சேதப்படுத்தியது மற்றும் அங்கிருந்த ஊழியர்களை தாக்கியது ரத்த காயம் ஏற்படுத்தியது உயிருக்கு ஆபத்தை விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கௌதம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆறு பேரை தேடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share