கேரள மக்கள் அதிகம் வாழும் கோவை மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.
ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.அவரை மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் குறிப்பாக கேரள எல்லையை ஒட்டி உள்ள நீலகிரி,கோவை,கன்னியாகுமரி,நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கோவையில் ஓணம் பண்டிகை நாளான இன்று மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் இல்லங்களில் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து உற்சாமாக கொண்டாடி வருகின்றனர்.
கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் தரிசனம் செய்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பாரம்பரிய வெண் பட்டாடை உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர்.
கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது அதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதேபோல ஓணம் பண்டிகையை ஒட்டி ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு இன்று முதல் நாளாக சோறு ஊட்டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல் என்றாலே ஓணம் சத்யா விருந்துதான். இன்று ஓணம் சத்யாவிற்கான ஏற்பாடுகளும் மலையாள மக்களின் இல்லங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 13 முதல் 35 உணவுகள் ஓணம் சத்தியாவில் பரிமாறப்படும்.