புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். old pension scheme
சிபிஎஸ் (Contributory Pension Scheme) ஒழிப்பு இயக்கம் சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
புதிய பென்ஷன் திட்டத்தால் ஓய்வூதியம் இல்லை, குடும்ப ஓய்வூதியம் இல்லை, பணிக்கொடை இல்லை, வருங்கால வைப்பு நிதி இல்லை, ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி இல்லை, ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை, பொங்கல் சிறப்பு மிகை ஊதியம் (கருணை தொகை) இல்லை, ஓய்வூதியர் குறைதீர் ஆணையம் இல்லை என கூறி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எல்லாம் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திவிட்டன. மேற்கு வங்கம் புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவே இல்லை.
ஆனால் தமிழக அரசு புதிய பென்ஷன் திட்டத்தை இன்னும் ரத்து செய்யாமல் இருக்கிறது என்று கூறி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் இருசக்கர பேரணி நடத்தினர். இவர்கள் கடந்த மார்ச் 16ஆம் தேதி தலைமை செயலாளர் முருகானந்தத்தை சந்தித்து, தங்களது கோரிக்கை குறித்து வலியுறுத்தி பேசினர்.
அப்போது தலைமை செயலாளர் உங்களது கோரிக்கை குறித்து நல்ல அறிவிப்பு வரும் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.
எனினும் இன்னும் அரசு தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்படாததால், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியான 309ன் படி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் திட்டமிட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள், அதாவது 72 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கூறியுள்ளது.