தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் நாம் காலை மற்றும் இரவு உணவாக பெரும்பாலும் இட்லி, தோசை, உப்புமாவையே அதிகமாக சாப்பிடுகிறோம். அரிசி மூலம் தயாரிக்கப்படும் உணவுகளால் உடலுக்கு அதிகமான கார்போஹைட்ரேட் கிடைக்கிறது. கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவைதான் என்றாலும் அது அதிகமாகும் போது உடல் பருமன் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகிறோம். எனவே தினமும் அரிசி உணவுகளை ஊட்டச் சத்துக்கள் நிறைந்த நவதானியங்கள் எடுத்துக் கொள்வது நல்லது.
நவதானிய தோசை என்பது சிறுதானியங்களான ராகி, சோளம், கம்பு மற்றும் பருப்பு வகைகள் சிறிது அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் சத்தான தோசையாகும். இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதில் புரதம், நார்ச்சத்து, மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. நவதானிய தோசை சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். சாதாரண இட்லி, தோசைக்கு பதிலாக குழந்தைகளுக்கு நவதானிய தோசை, இட்லி செய்து கொடுப்பது உடலுக்கு வலுவூட்டும்.
தேவையான பொருட்கள்
அரிசி, உளுந்து, பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, மொச்சை, கொள்ளு, கம்பு, ராகி ,சோளம் ஆகியவற்றுடன் வெந்தயம் சிறிதளவு சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மேற்கூறிய நவதானியங்கள் நன்கு ஊறிய பிறகு எடுத்து அரைத்து கொள்ளவும். ஆறிலிருந்து எட்டு மணி நேரத்திற்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அளவில் அதில் உப்பு, வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலக்கி எடுத்துக் கொள்ளவும்
தோசைக் கல்லில் கொஞ்சம் நவதானிய மாவை ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து திருப்பிப்போட்டு வேக வைத்து எடுத்தால் சூடான நவதானிய தோசை ரெடி. நவதானிய தோசை அப்படியே சாப்பிடலாம். நாம் அப்படி பழக்கப்படவில்லை என்பதால் சட்னி மற்றும் சாம்பார் உடனும் சேர்ந்து சாப்பிட்டலாம். இது அற்புதமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்.
வைட்டமின்கள், தாதுக்கள் நவதானிய தோசையில் நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. வழக்கமான எப்போதும் போல இட்லி தோசை சாப்பிடுவதை விட்டு நவதானிய தோசையை செய்து வீட்டில் கொடுத்துப் பாருங்கள் அற்புதமாக இருக்கும்.
