தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளை திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நேற்று (மார்ச் 23) சென்னை வந்தார். அதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து, முதல் முறையாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். சிறிது நேரத்தில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதிமுக தலைமையகத்திற்கு டிடிவி தினகரன் வருகை தந்தார்.
அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.அதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) கட்சிக்கு கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றில் அனைத்திலும் தோல்வியடைந்ததால், இம்முறை 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அதிமுக தலைமையகத்திற்கு செல்வதை புறக்கணித்தார்.
மேலும், நேற்று பியூஷ் கோயலிடம் தனது அதிருப்தியை ஜி.கே. வாசன் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆலோசனையில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம், “த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று விரிவாகப் பேசியிருக்கிறேன். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நான் சென்னையில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் த.மா.கா.வின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “என தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.மா.கா.வுக்கு ஒதுக்கப்படும் இறுதி தொகுதி எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
