சுப.உதயகுமாரின் பச்சை தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 4 அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தமிழக தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சுகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடத்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் போட்டியிடாத அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவினை ரத்து செய்திட இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 29A இன் விதிகளின் கீழ் அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அடிப்படையில், வருமானவரி விலக்கு, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு (RUPPs) பொதுச் சின்ன ஒதுக்கீடு, நட்சத்திரப் பரப்புரையாளர்களை நியமனம் செய்தல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஒரு அமைப்பானது அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் நோக்கம் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்பதேயாகும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் 2019-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய கட்சிகளுக்கு அவர்களின் பதிவினை ஏன் ரத்து செய்யப்படக்கூடாது என்பதற்கான காரணத்தினை தெரிவிக்க அறிவுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரால் விளக்கம் கோரும் அறிவிப்பாணை வெளியாகி உள்ளது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முகவரியைக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், எழுச்சி நேசம் கட்சி, பச்சை தமிழகம் கட்சி, மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய அரசியல் கட்சிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கட்சிகளின் தலைமை பொறுப்பாளர்கள் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வரும் 26.8.2025க்குள் நேரில் ஆஜராகிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை அறிக்கையை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்க அனுப்பி வைக்கும். இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என கூறப்பட்டுள்ளது.