ADVERTISEMENT

”என்னை யாரும் அழைக்காதீர்கள்” : நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடிதம்!

Published On:

| By christopher

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர்கள் யாரும் தன்னை சேம்பரில் வந்து சந்திக்க வேண்டாம்,  எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

ADVERTISEMENT

வழக்கமான நடைமுறைப்படி சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசி அவசரமாக வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கூறினர். இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஒத்தி வைத்தால், அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவார்கள் என்பதால், அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்தார்.

ADVERTISEMENT

இது சர்ச்சையாக மாறிய நிலையில், சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை தொடர்பு கொண்ட இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் எழுதினார்

மேலும், நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படுத்தாததால், அவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையே இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் குண்டர் சட்டத்தை ரத்து செய்வதா வேண்டாமா என்பதை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ’இந்த வழக்கு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்பதால், இந்த வழக்கை மீண்டும் மற்றொரு இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

மேலும் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பினை பற்றி கூறுகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்தார்.

அவர், “சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகள் அளித்துள்ள மாறுபட்ட தீர்ப்பை முழுமையான ஒன்றாக கருத முடியாது. ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தான் விசாரிக்க முடியும். குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதாக இருந்தால் அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க நிச்சயமாக அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஒருதலைபட்சமாகி விடும்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அதீத செல்வாக்கு மிக்க இரண்டு பேர் தன்னை அணுகியதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், நியாயமாக இந்த வழக்கை அவர் விசாரிக்காமல், விசாரணையில் இருந்தே விலகியிருக்க வேண்டும். அதைவிடுத்து ரத்து செய்ய முடியாது.” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

Image

இந்த நிலையில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பார் கவுன்சிலுக்கு நேற்று (ஜூன் 7) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “வழக்கறிஞர்கள் யாரும் என்னை சேம்பரில் சந்திக்க வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எதை சொல்வதாக இருந்தாலும், அதை திறந்த நீதிமன்றத்திலேயே சொல்லலாம்.

எந்த ஒரு கூட்டத்திற்கும் நிகழ்ச்சிக்கும் என்னை யாரும் அழைக்க வேண்டாம். இந்த மாதம் மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு நான் சம்மதம் தெரிவித்திருந்தேன். அவற்றில் நிச்சயமாக பங்கேற்பேன்.

அதன் பிறகு என்னை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து எந்த விதமான சங்கடத்திற்கும் ஆளாக்க வேண்டாம்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதான் பயமா இருக்கு : அப்டேட் குமாரு

மோடியை எதிர்த்து 2 முறை என்.டி.ஏ-விலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு; மோடி 3.0 நிலைக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share