சந்திரபாபு நாயுடு ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தேசிய அளவில் பெரும் கவனத்தினை ஈர்த்திருக்கிறார். அவருடைய ஆதரவுடன் தான் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றவுடன், சந்திரபாபு நாயுடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தருவாரா அல்லது இந்தியா கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்தன. சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று அறிவித்ததுடன், என்.டி.ஏ கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவையும் வழங்கினார்.
மோடி பதவியேற்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் இந்த கூட்டணி ஆட்சி 5 வருடங்களுக்கு தொடருமா என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்பி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் நாம் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
என்.டி.ராமாராவைக் கவிழ்த்த சந்திரபாபு நாயுடு
1975 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் துவங்கினார் சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமாராவின் மகளான புவனேஸ்வரியை 1981 ஆம் ஆண்டு மணந்தார். மாமனார் என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய பின்னரும் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்தார்.
அதன்பிறகு 1983 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளில் என்.டி.ஆர் சந்திரபாபு நாயுடுவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தார். பின்னர் என்.டி.ராமாராவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் உயர்ந்தார் சந்திரபாபு நாயுடு. தொடர்ந்து கட்சிக்குள் சந்திரபாபு நாயுடு வளர்ந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் கட்சிக்குள் என்.டி.ராமாராவையே கவிழ்த்து ஆந்திராவின் முதலமைச்சரானார்.
அதன் பிறகு தான் சந்திரபாபு நாயுடுவின் பெயர் தேசிய அளவிலும் முக்கியமான ஒன்றாக எதிரொலிக்க ஆரம்பித்தது. 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்கினார் சந்திரபாபு நாயுடு.
2002-லேயே மோடி பதவி விலக வேண்டும் என்ற முழக்கம்
அடுத்த மூன்று ஆண்டு இடைவெளியில் 2002 ஆம் ஆண்டு மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் மதக்கலவரம் வெடித்தது. இஸ்லாமியர்கள் ஏராளமாக படுகொலை செய்யப்பட்டபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துகொண்டே மோடி பதவி விலக வேண்டும் என்று முழங்கினார் சந்திரபாபு நாயுடு. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்தியக் குழு கூட்டத்தினையும் புறக்கணித்தார். ”பாஜக உடனடியாக குஜராத்தின் மாநில தலைமையை மாற்ற வேண்டும். மோடி நீக்கப்படவில்லை என்றால் நாம் மக்களின் நம்பிக்கையை இழந்து விடுவோம்” என்று வலிமையாக குரல் உயர்த்தினார். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு குஜராத் கலவரத்தைக் காரணமாகக் காட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே வெளியேறினார் சந்திரபாபு நாயுடு. இப்படி என்.டி.ஏ விலிருந்து சந்திரபாபு நாயுடுவின் முதல் வெளியேற்றமே மோடியை மையப்படுத்தித் தான் நிகழ்ந்தது.
மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
அதன்பிறகு 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரும் தோல்விகளை சந்தித்தார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். மோடியின் முதல் அமைச்சரவையிலும் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்றது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார். தெலுங்கு தேசத்தின் இரண்டு அமைச்சர்களும் பதவி விலகினர்.
ஆந்திராவின் உரிமை கேட்டு நான் 29 முறை டெல்லிக்குச் சென்றேன். ஆனால் நமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று மக்கள் முன்பு அறிவித்ததுடன், மோடி அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் பாஜகவினால் தோற்கடிக்கப்பட்டாலும், மோடிக்கு எதிரான முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தவராக சந்திரபாபு நாயுடுவே இருக்கிறார்.
மோடி அரசுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டிய திட்டம்
மேலும் மோடி அரசை கடுமையாக விமர்சித்ததுடன் நாடு முழுவதும் பல்வேறு மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மோடி எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆந்திராவின் பொருளாதார உரிமைகளுக்காக திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை இணைத்து உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார். இந்த அணியின் ஒரு அங்கமாக இல்லாவிட்டாலும், இந்த உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதனையே 2019 தேர்தலுக்கான பாஜகவிற்கு எதிரான அணியாகவும் முன்னிறுத்தினார் சந்திரபாபு நாயுடு.
இந்த காலக்கட்டத்தில் கடுமையான மோடி எதிர்ப்பாளராக நாடு முழுதும் பார்க்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. இது எனக்கும் மோடிக்கும் இடையிலான தனிப்பட்ட சண்டையல்ல. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மோடிக்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அவர் நாட்டை பிளவுபடுத்துகிறார். மக்களை அவமானப்படுத்துகிறார் என்று முழங்கினார்.
மோடியா நாயுடுவா என்ற கேள்விக்கு, நான் 1996 லேயே முதலமைச்சராக இருந்தேன். மோடியோ 2002 இல் தான் முதலமைச்சரானார். நான் கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன் என்று மோடி என்னை விட ஜூனியர் என்று விமர்சித்தார்.
மோடியின் மனைவியைப் பற்றி நாயுடு எழுப்பிய கேள்வி
இன்னும் ஒரு படி மேலே போய், மோடியின் மனைவியைப் பற்றியும் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார். நான் என் மகனுக்கு தந்தையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். என் மனைவி புவனேஸ்வரிக்கு கணவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இது எனது அடையாளம். ஆனால் நீங்கள் யார்? உங்கள் அடையாளம் என்ன? நீங்கள் முத்தலாக்கைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் செய்தது என்ன? என்று மோடியின் மனைவியின் நிலையைக் குறித்து கேள்வி எழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் மோடி பலரையும் முதுகில் குத்துபவர் என்று சொன்னதுடன், மோடி தனது அரசியல் குரு என்று சொன்ன அத்வானிக்கு செய்தது என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
குஜராத் மாடலா ஹைதராபாத் மாடலா என்று முழங்கி, உங்கள் குஜராத்தையும் அகமதாபாத்தையும் என்னுடைய ஹைதரபாத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் வளர்ச்சியில் முதன்மை என்பது புரியும் என்று பேசி வந்தார்.
அரசியல் கட்டாயத்திற்காகவே பாஜக கூட்டணி
நாங்கள் மதச்சார்பற்றவர்கள். நாங்கள் அரசியல் கட்டாயத்திற்காக சில முறை பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் இன்று ஜனநாயகத்திற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ, ஈடி, இன்கம் டேக்ஸ் எல்லா துறைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று பேசி வந்தார்.
உங்கள் அணியின் தலைவர் யார் என்ற கேள்விக்கு எங்களுடன் உள்ள அனைத்து தலைவர்களும் நரேந்திர மோடியைக் காட்டிலும் மேம்பட்டவர்களே. நாங்கள் கூட்டாட்சியைக் காக்கவே விரும்புகிறோம் என்று பதிலளித்தார்.
அறிவாலயத்தில் ஈவிஎம் குறித்த கூட்டம்
2019 ஜனவரி மாதம் சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கே நேரடியாக வந்து, ஈவிஎம் மெஷின் குறித்து கூட்டத்தை நடத்தினார் சந்திரபாபு நாயுடு. ஈவிஎம் மெஷின்களை ஹேக் செய்ய 100% வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. ஈவிஎம் மெஷினில் விவிபேட் ஸ்லிப்களை எண்ண வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இப்படி தீவிர மோடி எதிர்ப்பாளராக செயல்பட்டு வந்தார் சந்திரபாபு நாயுடு. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது. அதன்பிறகு மோடி எதிர்ப்பு அணியை உருவாக்குதல் என்ற முயற்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார் சந்திரபாபு நாயுடு.
கைதின் போது கண்டுகொள்ளாத பாஜக
ஜெகன் மோகன் ஆட்சியில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் ஜெகன்மோகன் அரசால் கைது செய்யப்பட்டார். 52 நாட்கள் சிறைக்குப் பிறகு அவருக்கு பிணை கிடைத்தது. அவர் கைது செய்யப்பட்ட போது முதல் கண்டனம் இந்தியா கூட்டணியிடம் இருந்தே வந்தது. தெலுங்கு தேசத்தின் தலைவர்கள் சிலர் அப்போதே பாஜகவை குற்றம் சாட்டினர். பாஜக அமைதியாக இருப்பதால் நாயுடுவின் கைதின் பின்னணியில் பாஜக இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
ஜெகன் மோகன் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து இதை செய்வதாக தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் அய்யண்ணா பதுருடு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பிறகு பல முறை அவரது மகன் லோகேஷ் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு அப்பாயிண்ட்மண்டே கொடுக்கவில்லை. லோகேஷை சந்திக்கவோ, சந்திரபாபு நாயுடு வழக்கிலோ அவர்கள் ஆர்வம் காட்டவே இல்லை. டெல்லிக்கே பல முறை சென்று வந்தார் லோகேஷ். அவரது முயற்சி பலனளிக்கவில்லை. கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகே லோகேஷிற்கு அமித்ஷாவை சந்திக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது.
கூட்டணிக்காக பேசச் சென்றபோது இழுத்தடிப்பு
மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து கூட்டணிக்காகப் பேசுவதற்கு டெல்லி சென்றபோது அவர் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார். ஒரு போன் காலுக்கே அவர் வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கூட்டணியை உறுதி செய்ய 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருந்தார் சந்திரபாபு நாயுடு.
இந்த பழைய நிகழ்வுகளை எல்லாம் பட்டியலிட்டு, ”சந்திரபாபு நாயுடு தேர்தலுக்கு முன்பு இப்படியெல்லாம் பாஜகவால் அவமானப்படுத்தப்பட்டார். மேலும் சந்திரபாபு நாயுடு மோடியை எதிர்த்தே இரண்டு முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அதனால் அவர் பாஜகவின் கூட்டணியில் நீண்ட காலம் இருக்க மாட்டார்” என்கிறார்கள் எதிர்கட்சிகள் தரப்பில்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததும் பெரும் பரபரப்பாக மாறியது.
ஆனால் சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்துள்ளார். அமைச்சர் பதவிகளைப் பொறுத்தவரை முக்கிய இலாக்ககளை குறிவைத்து சந்திரபாபு கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக டெல்லியிலிருந்து தகவல்கள் வருகின்றன.
லோகேஷின் பேச்சு உருவாக்கிய பரபரப்பு
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், தனது தொலைபேசி ஜெகன்மோகன் அரசால் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளது பரபரப்பாக மாறியுள்ளது. பெகாசஸ் மத்திய அரசால் பயன்படுத்தப்பட்ட உளவு செயலி என்பதால் மறைமுகமாக மத்திய அரசைக் குறிவைத்து அவர் பேசுகிறாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முக்கிய அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கு சந்திரபாபு நாயுடு தனது மகன் மூலமாக பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்கிறாரோ என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இருந்தாலும் மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் கடந்த இரண்டு முறையைப் போல, அவர் இந்த முறை ஒன் மேன் ஷோ நடத்த முடியாது, இந்த ஆட்சியில் அவருக்கு பல தலைவலிகள் காத்திருக்கின்றன என்று எதிர்கட்சிகள் சொல்லி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவேகானந்தன்
”தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி அமைப்போம்” : சீமான் உறுதி!
ஜூன் 14ஆம் தேதி முப்பெரும் விழா : திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!