பீகார் மாநில முதல்வராக 10-வது முறையாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சித் தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார்.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- ஜேடியூவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது.
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக 89; ஜேடியூ 85; எல்ஜேபி 19; அவாமி மோர்ச்சா 5 இடங்களில் வென்றன. இதனையடுத்து பாஜக- ஜேடியூ ஆட்சி தொடருகிறது.
பாஜக- ஜேடியூ கூட்டணியின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகார் தலைநகர் பாட்னா காந்தி மைதானத்தில் இன்று நவம்பர் 20-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
10-வது முறையாக பீகார் முதல்வர்..
பீகார் மாநிலத்தின் முதல்வராக 10-வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்.
- முதல் முறை: மார்ச் 3, 2000 – மார்ச் 10, 2000
- 2-வது முறை: நவம்பர் 24, 2005 – மே 20, 2014
- 3- முறை: பிப்ரவரி 22, 2015 – நவம்பர் 20, 2015
- 4-வது முறை: நவம்பர் 20, 2015 – ஜூலை 26, 2017
- 5-வது முறை: ஜூலை 27, 2017 – நவம்பர் 16, 2020
- 6-வது முறை: நவம்பர் 16, 2020 – ஆகஸ்ட் 9, 2022
- 7-வது முறை: ஆகஸ்ட் 10, 2022 – ஜனவரி 28, 2024
- 8-வது முறை: ஜனவரி 28, 2024 – ஜனவரி 30, 2024
- 9-வது முறை: ஜனவரி 31, 2024 – நவம்பர் 19, 2025
- 10-வது முறை நவம்பர் 20,2005 முதல்
ஒருமுறை கூட எம்.எல்.ஏ. இல்லை
பீகாரில் 10-வது முறையாக முதல்வரான நிதிஷ்குமார் 1995-க்குப் பின்னர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானது இல்லை. பீகார் மாநிலத்தில் சட்டமேலவை இருப்பதால் எம்.எல்.சியாகவே இருந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து வருகிறார் நிதிஷ்குமார்.
