தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீலகிரியில் மண்சரிவால் இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அக்டோபர் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. கல்லாறு, ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி மலை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடரந்து ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறையை தொடர்ந்து மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வமாக நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
