கும்மிடிப்பூண்டியில் 2,091 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலை திறக்கப்பட்டிருக்கும் நிலையில் இதன்மூலம் 2104 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக அரசு அமைந்தது முதல் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது ஆலைகளை திறந்து வருகின்றன.
அந்தவகையில், கும்மிடிப்பூண்டியில் 2,091 கோடி ரூபாய் முதலீட்டில், 2,104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 6) தொடங்கி வைத்தார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன், ஆற்றல் மற்றும் மின்சார அமைப்புகள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம், அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள்மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2023-ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் Mitsubishi Electric நிறுவனம் அமைத்துள்ள இத்தொழிற்சாலை, இந்தியாவில் அதன் முதலாவது அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
