வருமான வரியில் இருந்து விலக்கு பெற புதிய கட்சிகள் தொடங்குகிறார்கள் : தவெக வழக்கில் ஐகோர்ட்டு!

Published On:

| By Kavi

வருமான வரியில் இருந்து விலக்கு பெற புதிதாக கட்சிகள் தொடங்குகிறார்கள் என்று தவெக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சாரத்தின் போது, அக்கட்சித் தலைவர் விஜயை பார்க்க குவிந்தவர்களில் 41 பேர் உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. 

அதன்படி தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அமர்வில் இன்று (பிப்ரவரி 26) விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ‘பொதுக் கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன’ என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

ADVERTISEMENT

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது… நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. இது போன்ற கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. 

பல தேர்தல்களில் போட்டியிட்டு எம்பி, எம்எல்ஏக்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதில் என்ன தவறு உள்ளது’ என்று கேள்வி எழுப்பினர். 

தமிழக வெற்றி கழகம் எத்தனை தேர்தல்களை கண்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து அரசு தரப்பில் ‘இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மனுதாரரின் கட்சி இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது.. இந்த நிபந்தனைகளின் படி 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டதால் அதை தவிர்க்க 4,998 பேர் மட்டுமே பங்கேற்பார்கள்’ என்று கூறி விண்ணப்பிக்கின்றனர். 

ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கோ அல்லது முதலில் விண்ணப்பிக்கும் கட்சிக்கோ முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தவெக வழக்கறிஞர் பாலசுப்ரமணியம், எங்களால் கூட்டங்களை நடத்த முடிவதில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு அரசு சார்பில் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ஜெ. ரவீந்திரன், ‘கூட்டங்களை நடத்த வேண்டும் என்றால் முதலில் அவர்களின் கட்சித் தலைவர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

அதுபோன்று, ‘கூட்டப்பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு அதை எப்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கொடுக்க முடியும்’ என்று தவெக வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் கேட்டபோது, ‘மின்கம்பங்கள் மீது ஏறுவதும், காவலர்களை கடிப்பதும் அவர்களது தொண்டர்களாக இருக்கும் போது அதற்கு அவர்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் பதிலளித்தார்.

‘அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பெரும்பாலான கட்சிகள் ஏற்ற நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான் வேலூரில் நடந்த கூட்டத்துக்கு மேற்கூரை அமைத்தனர்’ என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, “பிரிவு 8(g)1-ன் படி, கூட்டத்தின் பாதுகாப்பிற்கு  அமைப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழக வெற்றிக்கழக மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share