வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் தற்போது பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் இரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 16) வெளியிட்ட அறிவிப்பில், “வருகின்ற 18 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
17-08-2025: நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-08-2025 முதல் 22-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.