தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று கோவை, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 38.5° செல்சியல் வெயிலும், குறைந்தபட்சமாக 21.0° செல்சியல் வெயிலும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று (14-08-2025) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (15-08-2025) காலை 0830 மணி அளவில், தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
15-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
16-08-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
17-08-2025 முதல் 21-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
