கோவையில் நடைபெற்ற சிஐடியு-வின் 16 ஆவது மாநில மாநாட்டின் நிறைவு நாளான இன்று (நவம்பர் 9) பேரணி, நடைபெற்றது. இன்று நடைபெற்ற மாநாட்டு நிகழ்வில் 41 புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாடு கோவையில் 6 ஆம்தேதி துவங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான இன்று சிஐடியுவின் புதிய மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மாநில துணைத் தலைவர்களாக அ.சவுந்தரராசன் உள்ளிட்ட 17 பேரும், உதவி பொதுச் செயலாளர்களாக 4 பேரும், செயலாளர்களாக 17 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநாட்டு தீர்மானங்கள்
- ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்.
- 8 மணி நேர வேலை நேரத்தை உயர்த்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
- அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; “சம வேலைக்கு சம ஊதியம்” தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பருவகால ஊழியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
- தமிழ்நாடு மின்சாரத் துறையைப் பொதுத்துறையாகப் பாதுகாக்க வேண்டும்.
- பட்டாசு தொழிலில் வெடி விபத்துகளைத் தடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடித் தேர்தல் நடத்த வேண்டும்.
- ஆட்டோ மீட்டர் கட்டணம் அறிவித்து ஆட்டோ செயலியை அமல்படுத்த வேண்டும்.
- கொரோனா காலகட்டத்தில் மூடிய தேசிய பஞ்சாலைகளை மீண்டும் திறந்து ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை-வீடு வழங்க வேண்டும்.
- கிக் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்ட உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
- டாஸ்மாக்கில் 23 ஆண்டு ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
- கட்டுமான நலவாரிய நிதி மடைமாற்றத்தை நிறுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக அ.சவுந்தரராசன் கோவையில் நடந்த நான்காவது சிஐடியு மாநில மாநாட்டில் இருந்து தொடர்ச்சியாக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பொறுப்புகளில் மாறி மாறி இருந்து வந்தார். 42 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தமிழ்நாடு தொழிற்சங்க வரலாற்றில் பி.ராமமூர்த்தி, அரிபட், வி.பி.சிந்தன், உ.ரா.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வரிசையில் இடம் பிடித்துள்ளார் அ.சவுந்திரராஜன்.
