நா.மணி New Education Policy 2020
அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “புதிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை” நூல் மதிப்புரை. New Education Policy 2020
Education Policy 2020
புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான உரையாடல் தமிழ் நாட்டில் கேட்கத் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகளை எட்ட இருக்கிறது. வரும் ஜூலை மாதத்தோடு, அமலாக்கம் பெற்று நிறைவடைய இருக்கிறது. பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை அதே பேச்சாக உள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் என எல்லோரும் போராட்ட களத்தில் உள்ளனர். New Education Policy 2020
“அமலாக்கம் செய்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து எண்ணற்ற கட்டுரைகள், நூல்கள், காணொளிகள் காணக் கிடைக்கின்றன. இது வரை இல்லாத வீரியம் மிக்க தலைப்போடு ஓர் புத்தகம் வந்திருக்கிறது. “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” அதன் தலைப்பு. அதனை எழுதியவர். தமிழ் நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மிகச் சிறந்த வடிவமைப்பு. அற்புதமான வண்ணப் படங்கள். 14 அத்தியாயங்கள். 135 பக்கங்கள்.
தேசிய கல்விக் கொள்கை 2020 ஏன் மதயானை என்று வர்ணிக்கிறார்? முதலில் இந்தியா ஓர் குடியரசு என்பதை மனதில் நிறுத்துவோம். New Education Policy 2020
மக்கள் சபைக்கு வராத கல்விக் கொள்கை
அது குடியரசாக பரிணமிக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை குடியரசாகவே நீடிக்கிறது. அரசியல் சாசனத்தின் படி, மத்திய மாநில அரசுகள் ஒத்திசைந்து செயல்பட வேண்டிய, பொதுப் பட்டியலில் உள்ள, கல்வித் துறைக்கு மத்திய அரசு ஒரு புதிய கல்விக் கொள்கையை வகுக்கிறது. அதன் மாநில அரசுகளோடு கலந்து ஒப்புதல் பெறவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பெயரளவில் கூட இதன் மீது விவாதம் நடைபெறவில்லை.

மத்திய அரசு தன்னகத்தே உள்ள “மத்திய கல்வி ஆலோசனை வாரியத்திடம்” கூட கலந்து ஆலோசனை செய்யவில்லை. கொரோனா பெரு முடக்கத்தில் ஊரே முடங்கிக் கிடந்த போது மத்திய அமைச்சர் ஒப்புதல் ஒன்றை மட்டுமே பெற்று ஒப்புதல் ஆகிவிட்டது. அப்படி அமலாக்கம் பெற்ற புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள், திருவிழா கூட்டத்தில் ஓர் மதயானை புகுந்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்பதை 14 அத்தியாயங்களில் விளக்குகிறார். New Education Policy 2020
பரிணாம வளர்ச்சி தொட்டு கல்வி New Education Policy 2020
நூலின் முதல் சொற்றொடரே நூலாசிரியருக்கு கல்வி பற்றிய புரிதலின் ஆழத்தை வெளிக்காட்டுகிறது. ” மனித வாழ்வின் அடித்தளமாக பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது” என்பதே அந்த தொடக்கம். முன்னுரையில் கல்வியின் முக்கியத்துவம், வரலாற்று ரீதியாக தமிழ்நாடு கல்விக்கு அளித்து வரும் முக்கியத்துவத்திற்கு சுருக்கமான ஓர் அறிமுகம் தருகிறார்.
அடுத்து நீதிக் கட்சி தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பை மிகச் சுருக்கமாக பதிவு செய்கிறார். எல்லாம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தமிழ் நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் செய்த பணிகளை ஒரே பத்தியில் பட்டியிலிடுவதை படிக்க பிரமிப்பாகவே உள்ளது.

அடுத்து புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தை சுருக்கமான முன்னுரையாக தரும் போது, ஒரு மாநில அரசின் பள்ளிக் கல்வி அமைச்சரே இப்படி ஒரு நூல் எழுத தூண்டியதற்கு அடிநாதமாக ரூபாய் 2,154 கோடி நிறுத்தி வைப்பை கணிக்க முடிகிறது. இந்த நிறுத்தி வைப்பைத் தொடர்ந்தே, “இரண்டாயிரம் கோடி பணத்திற்காக நிபந்தனைகளை ஏற்றால் இரண்டாயிரம் ஆண்டுகள் நம் தமிழ் சமூகம் பின் சென்று விடும்” என்று முதல்வர் சூளுரைத்தார். பள்ளிக் கல்வியில் மட்டும் புதிய கல்விக் கொள்கை 2020 என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதை அடுத்து வரும் அத்தியாயங்களில் வரிசைப் படுத்துகிறார். New Education Policy 2020
யார் தேர்வு செய்கிறார்கள்? யார் இழக்கிறார்கள்?
முதல் அத்தியாயம் ஓர் உலகப் பார்வையோடு விரிகிறது. 21 ஆம் நூற்றாண்டு சவால்களை சந்திக்க ஐக்கிய நாடுகள் சபையின், நிலையான வளர்ச்சி இலக்குகளில் கல்வி வளர்ச்சிக்கு தேவையான 4வது குறியீட்டை மாத்திரம் எடுத்துக் கொண்டு உலக நாடுகளோடும் நம் இந்திய நாட்டோடும் ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை முன் வைக்கிறார். அதில், ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிக் குறியீட்டை எட்டவே இந்தக் கல்விக் கொள்கை என்று கூறிக் கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு தங்களின் மதவாத அரசியலுக்கு கல்விக் கூடங்களை எப்படித் திட்டமிட்டு பயன்படுத்துவது என்பதை விளக்கிக் கூறுகிறார்.
கல்விக் குழுவில் இடம் பெற்றவர்கள் கல்வியாளர்களா?

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே புதிய கல்விக் கொள்கைக்கான அச்சாரம் விதைக்கப்பட்டதை விளக்கிக் கூறி, ஆர் எஸ் எஸின் பல்வேறு குழுக்கள் கல்விக் கொள்கை தயாரிப்பில் எவ்வளவு நேர்முகமாக மறைமுகமாக இடம் பெற்றது பகுப்பாய்வு செய்கிறது. அடுத்து கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் அதன் தலைவர் கஸ்தூரி ரங்கன் தொடங்கி ஒவ்வொருவர் பற்றிய சுருக்கமான குறிப்பை முன் வைக்கிறார். கஸ்தூரி ரங்கன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்திருக்கலாம். கல்வியில் அவரது பங்களிப்பு என்ன? பாஜக சார்பு நிலையை பயன்படுத்திக் கொண்டு பதவி சுகம் அனுபவித்தது தவிர.
டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் அறிக்கை தயாரிப்பில் மத சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தவர் பழங்குடியினர் பிரதிநிதித்துவம் இல்லை என்ற விமர்சனம் ஓங்கி ஒலித்தது. அதன் விளைவாக தங்களுக்கு ஏதுவான மேற்படி சமூகப் பிரிவை சேர்த்துக் கொண்டனர். இவர்களது பின்புலத்தை வாசிக்க நேர்பவருக்கு கல்விக் கொள்கை உருவாக்கத்தில் என்ன காத்திரமான பங்கு இருக்கிறது என்ற கேள்வி இயல்பாக எழும். அத்துடன் ஆர் எஸ் எஸின் நூற்றாண்டு கனவை நனவாக்க பின்னிருந்து செயல்பட்ட அமைப்புக்கள் பற்றியும் ஒரு புரிதலைத் தருகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.
எந்த நாட்டிலாவது இந்த மையப்படுத்தல் உண்டா?
கூட்டாட்சி கோலோச்சி வரும் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு வடிவத்திலும் இப்படி ஓர் மையப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை இல்லை. ஆனால் பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாட்டு கலாச்சாரம் கொண்ட பன்முகத் தன்மை மிகுந்த நாட்டில் ஒற்றைக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்பதை நான்காம் அத்தியாயத்தில் விளக்குகிறார். இந்தக் கல்விக் கொள்கை அமலாக்கம் செய்யப்பட்டால் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தெந்த பிரிவுகளுக்கு அது எதிரானதாக இருக்கும் என்பதை பட்டியல் இடுகிறார். New Education Policy 2020
“கல்வி என்பது பொது சேவை. தரமான கல்வி அடிப்படை உரிமை” என்று அரசியல் சாசனம் சொல்கிறது. ஆனால் இப்புதிய கல்விக் கொள்கை கல்வியை வணிகப் பொருளாக்கி, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசுகளை வெளியேற்றி நாட்டின் இறையாண்மைக்கு எதிராகக் கொண்டு செல்கிறது என்பதை விளக்குகிறது. New Education Policy 2020

அரசியல் சாசனத்தின் படி, நிர்வாக அதிகாரத்திற்காக மத்திய அரசின் கீழ் மாநில அரசுகள் வைக்கப்படவில்லை. மாநிலங்கள் சட்ட மன்ற நிர்வாகத்திற்காக எந்த வகையிலும் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. எனவே தானடித்த மூப்பாக ஒரு கொள்கையை திணிக்கக் கூடாது. அவ்வாறு திணித்தால் அது நடைமுறையில் இருக்கும் கல்வியை சிதைக்கும். கல்வி உரிமையை பறிக்கும் என்பதை புரிய வைக்கிறார்.
கல்வி நிதியில் கயமை:New Education Policy 2020
“எங்கே எங்கள் கல்வி நிதி?” என்ற கேள்வியோடு தொடங்குகிறது ஐந்தாவது அத்தியாயம். தமிழ் நாட்டின் கல்வி செயல்பாடுகள் சாதனைகளை விளக்கி நாடாளுமன்ற நிலைக் குழு தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறியும் விடுவிக்க வில்லை. நிதிப் பங்கீட்டில் பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எப்படி வெளிப்படையாக பாரபட்சம் காட்டுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது.
புதிய கல்விக் கொள்கையும் சிதைவின் உள்ளடக்கமும்

“சிதைக்கப்படும் பள்ளிக் கல்வி” என்ற தலைப்பில் உள்ள ஆறாம் அத்தியாயம் முன் பருவக் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தேசிய பரிசோதனை முகமை (NTA) வழியாக நடத்தப்படும் நீட் வரை உருவாக்கும் பாதிப்புகள் ஒன்றுவிடாமல் பட்டியலிடுகிறது. முன்பருவக் கல்வி முதல் இரண்டாம் வகுப்பு வரை அடித்தளக் கல்விக் காலம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இதுவே குழந்தைகள் மீதான ஓர் வன்முறை. முதல் வகுப்பிலேயே மூன்று மாத கால சிறப்பு முகாம் என்பதெல்லாம் சர்வதேச மனித உரிமை பிரகடனத்திற்கு எதிரானது என்பதை போதுமான ஆதாரங்களுடன் வரையறை செய்கிறார்.
நிதி ஏதும் ஒதுக்காமல் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் கலை திட்ட உருவாக்கம் என்று கூறுவது, அங்கன்வாடி கட்டமைப்பு செலவினங்கள் மாநில அரசுகள் தலையில் திணிப்பு. மனப்பாடம் இல்லை தேர்வு பயம் இல்லை. மன அழுத்தம் இல்லை என்று கூறி விட்டு, மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நாற்பது பருவத் தேர்வுகள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்ல முனைந்தால் எல்லாவற்றுக்கும் ஓர் தேர்வு. பள்ளிக் கல்வி நிர்வாகத்திற்கும் பிரதமரே தலைவர். மத்திய அரசு மட்டுமே கல்வி பற்றிய தீர்மானத்தில், உட்ச கட்ட அதிகாரம் படைத்தது என்பதை நிரூபிக்கக் கல்விக் கொள்கையும் ஓர் ஆயுதமாகத் தயாரிக்கப்படுகிறது. New Education Policy 2020
கற்க வருவோரை குலத் தொழில் நோக்கி கை காட்டலாமா?

தொழிற் கல்வி அல்ல குலக்கல்வி என்னும் ஏழாம் அத்தியாயம் கல்வி என்றால் என்ன? திறன் என்றால் என்ன? அடிப்படை கல்வி கிடைக்க வேண்டிய வயதில் திறன் மேம்பாடு என்று பேசினால் எது மாணவர்களை தினக் கூலிகளாக்கும் வேலை. எந்த நாட்டிலும் இல்லாத, சாதிப் பிரிவினைக்கு பின்புலமாக இருந்த தொழிலைத் தொடர்ந்து செய்ய வற்புறுத்தும் வேலை என்கிறார் நூலாசிரியர். New Education Policy 2020
அத்தோடு ஓர் ஆபத்தான விசயத்தை சுட்டிக் காட்டுகிறார். “இரண்டு வயதில் கல்வி. பத்து வயதில் ராணுவம். என்ற முசோலினி சொற்களுக்கும் மூன்று வயதில் கல்வி. பத்து வயதில் குலக்கல்வி” என்ற ஒப்பீட்டில் ஓர் ஸ்தூலமான புரிதலை உருவாக்குகிறார். உலக அளவில் உயர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ் நாட்டின் சாதனை எப்படி சாத்தியமானது என்பதை இதன் ஊடாக கோடிட்டுக் காட்டுகிறார். New Education Policy 2020
ஈடு இணையற்ற திணிப்புNew Education Policy 2020
அரசியல் அமைப்பு சாசனத்தின் படி, அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள் 22. அவற்றையேனும் தேசிய கல்விக் கொள்கை சரிசமமாக கருதப்பட வேண்டுமா? அதற்கு மாறாக, மும்மொழி கொள்கையின் அடிப்படையில், முக்கிய நீரோட்டத்தில் சமஸ்கிருதம் கொண்டுவரப்படும் என்கிறது. பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்ப பாடமாக இருக்கும் வகையில் மும்மொழி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.
விருப்பப் பாடம் என்பது என்ன? விரும்புவோர் பயில்வது தானே? விரும்பாதவர் வாயில் கட்டாயமாகத் திணித்து விட்டு, விருப்பப் பாடம் என்று கூறுவது எவ்வளவு பெரிய நேர்மையற்ற செயல்! New Education Policy 2020
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை 120 கோடி. அதில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை 24,821. இந்த கணக்கும் உண்மையில் சரிதானா என்பதில் கூட அழுத்தம் திருத்தமான சந்தேகம் உண்டு. காரணம், 1991 ஆம் ஆண்டு கணக்குப்படி இதே சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை 49,736 பேர். 1981ல் 6106 பேர். இதுவே 2001ல் 14,135 பேர். நம்பகத்தன்மைக்கு இந்த சாட்சியம் போதாதா? சமஸ்கிருதம் ஒரு பயன்பாட்டு மொழி அல்ல. பேச்சு மொழியும் அல்ல. அதனைத் திணிக்க ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடுவது எதற்காக? இதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன? காவியம் அன்றி வேறு என்ன காரணம் கூற முடியும்?

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல்(2014-2022), சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 1487.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையத்திற்கு வெறும் 74.1 கோடி. பண்டைக்கலம் தொட்டு, இன்று வரை செம்மாந்த இலக்கிய செறிவோடும், பயன்பாட்டு மொழியாக நின்று நிலவி வருவது தமிழ் மொழி. இன்றும் சுமார் ஏழு கோடி மக்கள் பேசும் மொழி. இதற்கு அற்பமான நிதி ஒதுக்கீடு. இந்த பகுப்பாய்வை முன் வைக்கும் போது, நூலாசிரியர் ஓர் எளிய கேள்வியை முன் வைக்கிறார்.
இத்தனை ஆயிரம் கோடி செலவழித்து, சமஸ்கிருதத்தை திணிப்பதால் என்ன பயன்? எப்படிப் பார்த்தாலும் ஆசிரியர் பணி கிட்டும் என்பதை தாண்டிய பயன்பாட்டை கூற இயலவில்லை என்று முடிக்கிறார். New Education Policy 2020
சமூக நீதியை சாய்க்கும் சொல்லாட்சி
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை கைபிடித்துத் தூக்கி விட உருவானதே இட ஒதுக்கீடு. இதனைப் பட்டியல் சமூகப் பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்றே காலங்காலமாக அழைத்து வருகிறோம். இதனையும் காலி செய்ய, மாற்றுப் பதம் ஒன்றை புதிய கல்விக் கொள்கை பயன்படுத்துகிறது. சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு செயல் திறன் அடிப்படையில் உதவி என்கிறது. இது நேரிடையாக இட ஒதுக்கீட்டிற்கான ஓர் சவால் என்பதை அடையாளம் காட்டுகிறார். New Education Policy 2020
கல்வி நிறுவனங்களில் எப்போது வேண்டுமானாலும் படிக்க செல்லாமல். எப்போது வேண்டுமானாலும் நின்று கொள்ளலாம் என்பதை சிலாகித்துப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இது ஓர் பகட்டான சொல்லாட்சி. நம் போன்ற நாட்டில் அது மிகவும் கடினமானது. இது பற்றி கள ஆய்வுகளோடு இரண்டு கட்டுரைகளை மின்னம்பலம் இதழில் எழுதியிருக்கிறேன். New Education Policy 2020
ஏதுமற்ற மக்கள் ஆண்டாண்டு காலமாகத் திட்டமிட்டு சமூக பொருளாதார ரீதியில் திட்டமிட்டு எப்படி வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதை அமலாக்க சவால்களாக சுட்டிக் காட்டி, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியாக இருந்தாலும் இந்த விசயத்தில் சமூக நீதியின் தலைநகராக தமிழ்நாடு எப்படி விளங்குகிறது என்பதோடு இந்த அத்தியாயம் நிறைவுறுகிறது. New Education Policy 2020
பாடத் திட்டங்களில் காவியம்New Education Policy 2020
பத்தாவது அத்தியாயத்தில் புதிய கல்விக் கொள்கையின் காவிமய சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துகிறது. கல்வியின் அவசியத்தை வேதகால கற்பனைக்குள் நுழைத்து இணைப்பது தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறார். அடுத்து அறிவியலுக்கு அப்பாற்பட்ட பிற்போக்கு விசயங்களை பிஞ்சுகள் மனதில் விதைக்கும் திட்டத்திற்கான சான்றுகள் பட்டியலிடப்படுகிறது. New Education Policy 2020
பாஜகவின் ஒரே இந்தியா என்ற முழக்கம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அது “ஒரே இந்தியா. அது வேதகால இந்தியா” என்ற அழித்தொழிப்பு பாதையை நோக்கி அழைத்துச் செல்ல முயல்வதை அடையாளம் காட்டுகிறார். New Education Policy 2020
உலகுடன் உறவாட கலை இலக்கியம் வேண்டும். உலகோடு போட்டியிட அறிவியல் தொழில்நுட்பம் வேண்டும். தமிழ் நாட்டின் முயற்சிகளை எடுத்துக் காட்டாகக் கூறி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அரசுப் பள்ளிகளை அழித்தொழிக்கும் திட்டமா?

அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா என்ற தலைப்பே அடி வயிறு பற்றி எரிவது போல் உள்ளது. புதிய கல்விக் கொள்கை கூறும் ‘பள்ளி வளாகம்’ அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் என்பதை சான்றுகளோடு நிறுவுகிறார். New Education Policy 2020
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6000 பள்ளிகளை ஒன்றிணைக்க 4600 பள்ளிகள் எப்படி மூடப்பட்டது. பாதிப்பு தாங்காமல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்து தற்காலிகமாக அது நிறுத்தப்பட்டுள்ளதை உதாரணமாகத் தருகிறார். உத்திரப் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கையின் வருகைக்கு முன்னர், 63 விழுக்காடு அரசுப் பள்ளிகள் இருந்தன. இப்போது தனியார் பள்ளிகள் 64 விழுக்காடாக மாறியிருக்கும் புள்ளிவிபரத்தை ஆதாரமாக் காட்டுகிறார். New Education Policy 2020
அரசுப் பள்ளிகளின் மூடல். 100 விழுக்காடு தனியார்மயம். கட்டணக் கொள்ளையின் சுருக்கம் என புதிய கல்விக் கொள்கையை பார்க்கலாம் என்கிறார். முத்தாய்ப்பாக, பள்ளிக் கல்வியில் அடிப்படை சமத்துவத்தையே அற்றுப் போகச் செய்து விடும் என்று சொல்லி முடிக்கிறார். New Education Policy 2020
கூலி உழைப்பாளர்களாக உருமாற்றப்படும் ஆசிரியர்கள்
ஆசிரியர் நலனுக்கு ஏன் புதிய கல்விக் கொள்கை எதிரானது என்ற வாதங்களை அடுக்கும் போது, புதிய கல்விக் கொள்கையால் ஆசிரியர் சமூகத்திற்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகள் ஒன்றைக் கூட விட்டு வைக்கவில்லை. ஆசிரியர் கல்விக்கான பட்டயப் பயிற்சி, பட்டப் படிப்பு ஆகியவற்றில் ஏற்படவிருக்கும், அதில் உள்ள சிக்கல்கள் பற்றி முதலில் திறனாய்வு செய்கிறார். New Education Policy 2020

ஆசிரியர் பணி என்பதே அடிப்படையில் தற்காலிகப் பணியாக புதிய கல்விக் கொள்கையால் எவ்வாறு பார்க்கப்படுகிறது? அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எப்படி ஆசிரியர்களை நிரந்தரமாக தற்காலிக ஆசிரியர்களாக நீடிக்கச் செய்யும்? ஆசிரியர் பணி என்பது எப்படி டென்யூர் டிராக் சிஸ்டமாக மாற்றப்பட உள்ளது? ஆசிரியர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராடினால் ஏற்படும் பணி இழப்பு, பதவி இழப்பு, ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும் கண்காணிப்பு தொடர் மதிப்பீடுகள், பணி இடை நிறுத்தம் அதனால் ஏற்படும் மன அழுத்தம் என ஒன்றைக் கூட விடாமல் பட்டியலிடுகிறார்.
இது என் பள்ளி. இது என் மாணவர்கள் என்ற பற்றே ஆசிரியர் பணியின் ஆணிவேர். அதையே அற்றுப் போகச் செய்து வெற்று கூலி உழைப்பாளர்களாக ஆசிரியர்களை மாற்றும் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மறுபுறம் பள்ளிக்குள் ஆர் எஸ் எஸின் ஆட்களை பள்ளிக்குள் அனுப்பி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள செய்யப்பட்டுள்ள வழிமுறைகளை விளக்குகிறார். New Education Policy 2020
இறுதியாக தேசிய கல்வி ஆணையம் என்பது கல்விக்கூட ஜனநாயகத்தை தலைகீழாக மாற்றும். மாநில அரசிடம் உள்ள அதிகாரங்கள் மத்திய அரசுக்கு கைமாறும். ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முற்றிலும் பறிபோகும் என்பதை விளக்கிக் கூறுகிறார்.
தமிழ் நாட்டு பள்ளிக் கல்வி சிறப்புகள்
இந்தியா போன்ற பன்முகத்தன்மை மிக்க நாட்டில், பாதிப்புகள் ஏதும் இல்லாமல், எல்லா மாநிலங்களிலும் ஓர் கல்விக் கொள்கை விரும்பி ஏற்க வேண்டும் எனில், அது இந்திய தேசத்தின் கடந்த கால வரலாற்றை உள்வாங்க வேண்டும். அரசியல் சாசனத்தின் மாண்புகளின் அடிப்படையில் அமைய வேண்டும். கூட்டாட்சி உரிமைகளை குலைக்காமல் உருவாக்க வேண்டும. அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம். தலைசிறந்த கல்வியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகளின் கூட்டு உழைப்பில் உருவாக வேண்டும் என்று மிக நேர்த்தியாக வரையறை செய்கிறார்.
மேலே கூறப்பட்ட எதுவும் இல்லாமையால் தான் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை இவ்வளவு பரந்து பட்ட விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்பதை வாசிப்பவர்கள் தர்க்க ரீதியான முடிவுக்கு வர முடியும். இதில் ஓர் ஆழமான நகை முரண் ஒன்றையும் சுட்டிக் காட்டுகிறார். New Education Policy 2020
“எந்த மொழியைப் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம் என்றார்களோ அதே மொழியை கற்றுக் கொள் கற்றுக் கொள் என்று கல்விக் கூடங்கள் வழியாக திணிக்கிறார்கள்”. “தமிழ் நாடு போராடும். தமிழ் நாடு வெல்லும்” இந்த அத்தியாயத்தின் இறுதி பகுதியில் தற்போதைய தமிழக அரசு அமலாக்கம் செய்து வரும் பள்ளிக் கல்வித் திட்டங்களை முன் வைக்கிறார். New Education Policy 2020
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் கொரோனா கால கற்றல் இடைவெளியை நிரப்பக் கொண்டு வந்த இல்லம் தேடிக் கல்வி, பசித்த வயிற்றோடு பாடம் கற்க செல்லக் கூடாது என்று கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம்,கலைத் திறன் மேம்பாட்டுத் திட்டம், தனித் திறன் மேம்பாட்டுத் திட்டம், உலகளாவிய அறிவை உள்வாங்கிக் கொள்ள திரைப்படங்கள், நூலகங்கள், நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், கல்வி வரலாறு ஆகியவற்றில் மாணவர்கள் முதன்மை பெற புது ஊஞ்சல், தேன் சீட்டு இதழ்கள், படைப்பாற்றல் திறனை மேம்படுத்தக் கனவு ஆசிரியர் மாத இதழ் என 67 வகையான திட்டங்களை வரிசைப் படுத்துகிறார்.
புதிய கல்விக் கொள்கை என்னும் மதயானை தமிழ் நாட்டில் புகுந்தால், மேற்படித் திட்டங்களை சீரழித்து தமிழ் நாட்டின் பொது மக்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அலுவலர்கள் என எல்லோர் நலனையும் கேள்விக்கு உள்ளாக்கிவிடும். எனவே அனைவரும் ஒன்று பட்டு எதிர்க்க வேண்டும் என்று கூறி புதிய கல்விக் கொள்கை மீதான தனது ஆய்வு உரையை நிறைவு செய்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கேள்விகள் வழியே புரிய வைக்கப்படும் நேர்மறை எதிர்மறை விசயங்கள்
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ இறுதி அத்தியாயம் முற்றிலும் வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை வழியாக ஆர் எஸ் எஸ் முன்னெடுத்துச் செல்ல முயலும் அஜெண்டா அது விசயத்தில் திராவிட மாடல் அரசு செய்து கொண்டு இருப்பது என்ன என்பதையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
கல்விக் கொள்கை உருவாக்கம், பாடதிட்ட வடிவமைப்பு,கற்பித்தல், இந்திய அறிவு மொழிகள், நன்னெறி, இருமொழிக் கொள்கையும் மும்மொழிக் கொள்கையும், மீண்டும் குலக்கல்வி, அரசுப் பள்ளிகளும் ஆர் எஸ் எஸும் மதிப்பீடு, கல்விக் கட்டணம், ஆசிரியர் பணிக்கு ஆபத்து என்பவை தலைப்புகள் ஆகிய தலைப்புகளில் இந்த ஒப்பீட்டை முன் வைக்கிறார்.

அதன் அடிப்படையில் கீழ் காணும் கேள்விகளை வாசகர்கள் முன் எழுப்புகிறார்.
1) நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை எழுதும் சாக்பீஸ் ஜனநாயகத்தின் கையில் இருக்க வேண்டுமா? சர்வாதிகாரியின் கைகளில் இருக்க வேண்டுமா?
2) நம் குழந்தைகளின் பள்ளிகளை வடிவமைப்பு செய்பவர்கள் அவர்களது மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்க வேண்டுமா? அல்லது இவர்களுக்கு சம்பந்தம் இல்லாத நாக்பூர் டெல்லி முகமூடிக் காரர்களாக இருக்க வேண்டுமா?
3) கல்விக்கான முன்னெடுப்பில் அனைவரின் குரல் ஒருங்கிணைந்த குரலாக எழ வேண்டுமா? இல்லை ஒற்றைக் குரல் எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டுமா?
4) நம் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை நோக்கி விண்ணில் பறக்க சிறகுகள் வேண்டுமா? அல்லது கடந்த கால சங்கிலிகளால் அவர்கள் கை கால்கள் கட்டிப் போடப்பட வேண்டுமா?
5) ஆரம்பக் கல்வி அக்கறை சார்ந்ததாக இருக்க வேண்டுமா? தேர்வு என்னும் அச்சத்தோடு தொடங்கப்பட வேண்டுமா?
6) வரலாறு என்பது ஒரு சாராரின் வரலாறா? அல்லது அனைத்து மக்களுக்குமானதா?
7) நம் கல்விமுறை, நமது பன்முகத்தன்மையை பிரதி எடுத்துக் கொள்ள வேண்டுமா? இல்லை ஒற்றை கருத்தியலின் வார்ப்பாக மாற வேண்டுமா?
8) சாதிப் படிநிலைக்கு வித்திட்ட வர்ணாசிரமம் உள்ளிட்ட வேதங்கள் மாணவர்களுக்கு அறநெறியையும் சமத்துவத்தையும் வழங்குமா? அல்லது ஏற்றத்தாழ்வையும் சாதிய மனோபாவத்தையும் மீட்டுருவாக்கம் செய்யுமா?
9) உலகப் பொதுமறையை தந்த தமிழ் இலக்கியங்கள் வழியே நன்னெறியை கற்றுக் கொள்ள இயலுமா? அல்லது புராண கட்டுக்கதைகள் மூலம் சாத்தியமா?
10) ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை இந்திய மொழிகள் அனைத்தையும் சமமாக கருதுகிறதா? அல்லது ஏற்கனவே உள்ள பன்முகத்தின் மீது சமஸ்கிருதத்தையும் இந்தியையும் இறுக்கமாகத் திணிக்கிறதா?
11) மொழி அறிவு பெறுதல் என்பது முன்னேற்றத்திற்கா? அல்லது வடிகட்டலின் வாயிலாக இருக்க வேண்டுமா?
12) தேர்வில் தோல்வியுறும் மாணவனை ஊக்குவித்து கற்றலில் ஈடுபடுத்த வேண்டுமா? அல்லது குலக்கல்வி நோக்கி உந்தித் தள்ளுவதா?
13) உலகை உந்தி வானத்தில் ஏறும் தொழில்நுட்ப கல்வி சிறந்ததா? அல்லது படிநிலை சமூகத்தை கட்டிக் காக்கும் குலக்கல்வி உகந்ததா?
14) பள்ளிகளுக்கு தன்னார்வலர்களை அனுப்பி வைப்பது கல்வி பரப்பவா? மதவாதத்தை பரப்பி பள்ளிகளை கபளீகரம் செய்யவா?
15) முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் பங்களிப்போடு கல்விக் கூடங்களை மேம்படுத்துவோமா அல்லது பிற்போக்குவாதிகளை பள்ளிக்குள் விட்டு அரசு பள்ளிகளுக்கு தனியார்மய பாதையை காட்டுவோமா?
16) ஒரு குழந்தையின் கல்வியை வகுப்பு ஆசிரியரால் அளவிட முடியுமா? ஆயிரம் மையில்களுக்கு அப்பால் இருக்கும் அதிகார மையத்தால் அளவிட முடியுமா?
17) கற்றலில் இடைநிற்றலை குறைத்து அனைவரும் கல்வி என்பதை உறுதி செய்வது சரியானதா? அல்லது எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்று துரத்தியடிப்பது சரியானதா?
18) கல்வியை மேலும் மேலும் விலை உயர்ந்த விற்பனைப் பொருளாக மாற்றினால் ஏழை எளிய பிள்ளைகளுக்கு ஏதுவானதாக இருக்குமா? அல்லது வசதி படைத்தவர்களுக்கானதாக இருக்குமா?
19) ஆசிரியர்கள் கல்விக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக இருத்தல் சிறந்ததா? அல்லது வாடகைப் பணியாளர்களாக கருதுவது முறையானதா?
20) கல்விக் கொள்கை என்பது மாணவர்கள் அனைவரையும் வாழ்வில் சிறக்க வைக்க வேண்டுமா? அல்லது கல்வி பெறுவதில் தடைகளை உருவாக்க வேண்டுமா?
நிறைவாக, New Education Policy 2020
இந்தக் கேள்விகளுக்குள் புதிய கல்விக் கொள்கைக்கான பதில்களும் அடங்கியுள்ளது. தமிழ் நாட்டின் சாதனைகளும் தொலைநோக்கு பார்வையும் அடங்கி உள்ளது. இந்த நூல் கையில் கிடைத்ததும் ஒரே மூச்சில் வாசித்து விட்டு முழுமையான ஓர் மதிப்புரை எழுதுவதில் மனம் நிறைவு கொள்கிறது.
தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வி அமைச்சரே புதிய கல்விக் கொள்கையின் ஆழ அகலத்தை புரிந்து கொண்டு மிகுந்த நுட்பமாக ஆய்வு செய்து நூலாக படைத்திருப்பது தமிழ் நாட்டிற்கு பெருமை தரும் செயல். புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தின் ஆயுதமாக திகழும்.
நூலாசிரியர் பாணியில் கூறுவதென்றால் புதிய கல்விக் கொள்கை என்னும் மதயானையை அடக்கக் கிடைத்த அங்குசங்களில் ஒன்று இந்த நூல் என்றால் அது மிகையல்ல.
கட்டுரையாளர் குறிப்பு
நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
பதிப்பகம் : அன்பில்
விலை : ரூ.300/-