ADVERTISEMENT

கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் அரசு அலட்சியம் – அன்புமணி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Anbumani

மழையில் நனைந்து சரக்குந்துகளிலேயே 36,000 நெல் மூட்டைகள் முளைக்க தொடங்கி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிமாவட்டங்களில் உள்ள அரிசி அரவை ஆலைகளுக்கு தொடர்வண்டிகளில் ஏற்றி அனுப்புவதற்காக கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்திற்கு சரக்குந்துகளில் கொண்டு வரப்பட்ட 36,000 நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படாததால், கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கடந்த 16-ஆம் நாள் சரக்குந்துகள் மூலம் கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவை அதே நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ தொடர்வண்டிகள் மூலம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 11 நாள்களாகியும் இன்று வரை அவை அனுப்பப்படாமல் சரக்குந்துகளுடன் தொடர்வண்டி நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இடையில் மழை பெய்ததால், நன்றாக நனைந்த நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கி விட்டன. இப்போதும் கூட அந்த நெல் மூட்டைகளை அனுப்பி வைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் சில நாள்கள் இதே நிலை நீடித்தால் அந்த நெல் பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

ADVERTISEMENT

அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்ப முடிவு செய்த அரசு, அதற்குத் தேவையான தொடர்வண்டி பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்குகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்; அல்லது சரக்குந்துகள் மூலமாகவே அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், எதையும் செய்யாததால் நெல் மூட்டைகளையும் வீணடித்து, 11 நாள்களுக்கும் மேலாக சரக்குந்துகளுக்கு வாடகை வழங்க வேண்டிய நிலையையும் திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் திமுக அரசின் நிர்வாகத் திறனா?

கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் முளைத்த நிலையில், சரக்குந்துகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் பயன்பாட்டுக்கு உகந்தவையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவற்றை பயன்படுத்த முடியும் என்றால் உடனடியாக அரிசி ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share