நாமக்கல்லை சேர்ந்த வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணி, அவரது மனைவி பிரமீளா இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல்வேறு விடை தெரியாத சந்தேகங்கள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். Namakkal RTO Couple
நாமக்கல் அருகே வகுரம்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது; அதே இடத்தில் பெண் ஒருவர் உடல் நசுங்கிய நிலையில் கிடந்தது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நாமக்கல் கலைவாணி நகரில் வசித்து வந்த ஆர்டிஓ சுப்பிரமணி (வயது 56), அவருடைய மனைவி பிரமிளா (வயது 50) ஆகியோரது சடலங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. திருச்சியில் ஆர்டிஓவாக சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி பிரமிளா, மோகனூர் அருகே உள்ள ஆண்டாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். சுப்பிரமணி- பிரமிளா தம்பதிக்கு சம்யுக்தா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். அமெரிக்காவில் பொறியியல் படித்த சம்யுக்தா தற்போது நாமக்கல் வந்துள்ளார்.
ஆர்டிஓ சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின.
சுப்பிரமணி- பிரமிளா மரணத்துக்கு சொல்லப்படும் காரணங்கள்:
- சுப்பிரமணி- பிரமிளா தம்பதியினர் கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்
- நடைபயிற்சி செல்ல வகுரம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்; இருவரும் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி பலியாகினர்.
- ஆர்டிஓ சுப்பிரமணி- பிரமிளாவின் மகளுடன் முதல் நாள் இரவு கடுமையான வாக்குவாதம் நடந்தது; அதன் பின்னர் மறுநாள் காலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்
- கல்குவாரி விவகாரத்தில் சுப்பிரமணி மர்ம மரணம் அடைந்துள்ளார்.
இப்படியான தகவல்களுக்கு மத்தியில், ‘கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அதில், “தங்களது மகள் வேறு சமுதாய இளைஞரை காதலித்ததால் ரயில் முன் பாய்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது மிகவும் வேதனையையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரின் உண்மைத்தன்மை தொடர்பாக அதில் குறிப்பிட்ட செல்போனில் நாம் பேசிய போது, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட போஸ்டர் உண்மையானதுதான் என உறுதி செய்யப்பட்டது.
ஆர்டிஓ சுப்பிரமணி- பிரமிளா தம்பதியினர் ‘மர்ம’ மரணத்தில் உள்ள விடைதெரியாத இந்த சந்தேகங்களுக்கு எப்போது விடை கிடைக்கும்? என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.