தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று ஜூலை 9-ந் தேதி பொது வேலை நிறுத்தம் (பாரத் பந்த் Bharat Bandh) நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

- நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதால் சென்னை வருமான வரித்துறை அலுவலகம்- ஆயக்கர் பவன் வெறிச்சோடியது
- சென்னை அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மறியல் போராட்டம் நடைபெற்றது
- வடசென்னையில் செங்கொடிகளுடன் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்
- திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்
- அவிநாசியில் தபால் அலுவலகம் முன்பாக தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்
- நாமக்கல் பள்ளிபாளையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
- ராமநாதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவாஜி போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
- கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்
- செங்கல்பட்டில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
- கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது
- மதுரையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது
- விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய இடதுசாரி தொழிற்சங்கத்தினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
- தூத்துக்குடி துறைமுகம் முன்பாக துறைமுக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்
