அஜித்குமார் படுகொலையை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் வருகின்றன. Vijay to participate in protest
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமார், திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.
அஜித்குமார் மீது சுமத்தப்பட்ட திருட்டு புகாரையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அஜித் குமார் படுகொலைக்கு நீதி கேட்டு ஜூலை 6ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தவெக அறிவித்திருந்தது.
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை சிவானந்தா சாலையில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் வரும் 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது.
இந்த நிலையில் அஜித் குமாருக்கு நீதி கேட்டு நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொள்வார் என தகவல்கள் வருகின்றன.
இந்த சூழலில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் பேரை ஆர்ப்பாட்டத்திற்கு திரட்டி வருவதற்கான வேலைகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே அஜித்குமாரின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவரது அம்மாவுக்கும், தம்பிக்கும் விஜய் ஆறுதல் தெரிவித்து 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay to participate in protest
