உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் பெண்களை கடத்த முயலும் நிர்வாண கும்பல் தொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் ட்ரோன் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள பராலா கிராமத்தில் தனியாக வேலைக்குச் சென்ற ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் வயலுக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது. அந்தப் பெண் அலறியடித்து அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வயல் பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடியபோதும், குற்றவாளிகள் யாரும் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண், தன்னை இழுத்துச் சென்றவர்கள் எந்தவித ஆடையும் அணியாமல் இருந்தனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த அவர், தற்போது மாற்று வழியில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவம் அப்பகுதியில் நடக்கும் நான்காவது முயற்சி என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.
முன்னர் பாதிக்கப்பட்ட பெண்கள், அச்சம் காரணமாகத் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படும் சூழல் உருவாகியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில் ” தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். கிராம மக்களிடம் விசாரணை நடத்திய பிறகு, அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது, இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. முழு வழித்தடத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் காவல் அதிகாரி தலைமையில் பெண் போலீசார் மற்றும் சாதாரண உடையில் ஆண் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முழுப் பகுதியையும் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
மேலும்சந்தேககிக்கப்படும் நபர் மனநிலை சரியில்லாதவராக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில் அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.