விஜய் திமுகவின் பீ டீமா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் பி டீமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கேவிக்குப்பம் பேருந்து நிலையத்தில் தமிழகம் தலைநிமிர தமிழரின் பயணம் என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விஜய் பாஜகவின் பி டீம் என பரவலாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு விஜய் பிஜேபியின் பி டீம் என்ற வதந்தியை திமுகவினர் பரப்பி விடுகிறார்கள். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைத்து கோயபல்ஸ் தத்துவத்தை கடைப்பிடிப்பது திமுகவின் வாடிக்கை. எங்களை பார்த்து பி டீம் என்கின்றனர்.
செங்கோட்டையன் அவர்கள் விஜய் கட்சியில் சேரும் போதும் அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான் சென்றார். இதனால் விஜய் திமுக வின் பீ டீமா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் பி டீமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி விஜய் கட்சியுடன் சேர உள்ளது என நீங்கள் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, “விஜய் காங்கிரஸ் கட்சியினருடன் சந்தித்து பேசினாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர் தெளிவுபடுத்தினால்தான் இது குறித்து முழுமையாக தெரியவரும் என்றார்.
பாஜகவிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, “ஒரு பழமொழி உண்டு ஆடு நினைகிறதே என்று யாரோ கவலைப்பட்டது போல் உள்ளது. அதிமுக , திமுக எதிர், எதிர் கட்சி. அதனால் அண்ணா திமுகவை காப்பாற்ற வேண்டிய அவசியம் இவர்களுக்கு என்ன வந்தது. அதிமுகவுடன் கூட்டணி என்பது இன்று நேற்று வந்ததில்லை. 1 ஜனவரி 1995ல் அத்வானி அவர்கள் புரட்சி தலைவி அம்மாவுடன் கலந்து கொண்டு கூட்டணி வைத்திருந்தனர். அதை கலைஞர் விமர்சனம் செய்தார்.
ஆனால் 99ல் அதே பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததா.. இல்லையா.. இவர்களுக்கு வேண்டும் என்றால் ஒன்று பேசுவார்கள் வேண்டாம் என்றால் ஒன்று பேசுவார்கள்.
விஜய்யின் திமுக தீய சக்தி.. தூய சக்தி பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, புரட்சி தலைவர் எம்ஜிஆர் சொன்னதைத்தான் விஜய் சொல்லியுள்ளார் என்றார்.
