கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. இப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல இயக்குநர்களான வசந்த், பொன். ராம் ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், படத்தின் நாயகன் ரியோ ராஜை வாழ்த்திப் பேசியபோது, அவரது பெயரைப் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து ஒரு சுவாரஸ்யமான கருத்தைத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “நான் பொதுவாகப் பழகும் போது, பெயர்களின் மீது அதிக கவனம் செலுத்துவேன். இங்கே இந்தத் தம்பி ரியோ ராஜ் இருக்கிறார். இவர் நன்றாக இருக்கிறார். இவருடைய முகம், கண்கள் எல்லாம் நன்றாகப் பேசுகிறது.
எனக்கு சிறிய வேண்டுகோள் ஒன்று இருக்கிறது. தயவு செய்து ‘ரியோ ராஜ்’ என்று வேண்டாம். ‘ரியோ’ மட்டுமே போதும். அதுவே நல்லாயிருக்கு. பெயரில் அதிக எழுத்துக்கள் சேரும்போது, அது தேவையில்லாத ஒரு சுமையை ஏற்படுத்தக்கூடும்.
‘ரியோ’ என்ற பெயரே தனித்துவமாகவும், அழகாகவும் இருக்கிறது. இந்தப் பெயர் இவருக்குக் கண்டிப்பாக வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். இவர் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.”
இயக்குநர் மிஷ்கின், தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் மேடையில் வெளிப்படையாகவும், தனித்துவமாகவும் இந்த கருத்தைப் பதிவு செய்தது அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
