தம்மை மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் கார் ஏற்றி கொல்ல முயன்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் மதுரை ஆதீனம் இன்று ஜூலை 5-ந் தேதி ஆஜராக சென்னை போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது. Madurai Aadheenam
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த மே 2-ந் தேதி சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காருடன் ஆதீனத்தின் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், தம்மை மாற்று மதத்தினர் கொல்ல முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னர், ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில், ஆதீனத்தின் கார்தான் மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது அம்பலமானது. இதனால் மாற்று மதத்தினர் தம்மை கொல்ல முயற்சித்ததாக ஆதீனம் கூறியது பொய் என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்த ஆதீனம் முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் மதுரை ஆதீனம், விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆதீனம் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று ஜூலை 5-ந் தேதி ஆதீனம் ஆஜராக 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ஏற்று ஆதீனம் ஆஜராவாரா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.