“2026 ஆம் ஆண்டுக்கான இந்த தேர்தலிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்டாயம்; கூடுதல் தொகுதி பெற்று
கூடுதல் வலிமை பெறுவோம்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது. இந்நிலையில் விசிகவின் உயர்நிலைக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.
இது தொடர்பாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எத்தனை கூடுதல் தொகுதிகள் கிடைக்கப் போகின்றன? என்னும் எதிர்பார்ப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமல்ல;
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
திமுக தோழர்கள் மட்டுமல்ல;எதிரணியினர் கூட விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்னும் ஆதங்கத்தை இரு நாட்களாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி அறிவிப்புக்காக விடிய விடிய நாடே விழித்து காத்து கிடந்தது. அதைப் போல ஒரு காத்திருப்பு இந்த சட்டப் பேரவை தேர்தலில் ஏற்பட்டுள்ளது.
புரட்சியாளர் அம்பேத்கர் யாத்து தந்த மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தை தகர்த்து விட்டு, சனாதன இந்து ராஷ்டிர சட்டத்தை நிறுவ முயலும் பாஜக கும்பலை வீழ்த்த வேண்டிய கடமை உணர்வோடும கோட்பாட்டு இலக்கோடும் விடுதலைச் சிறுத்தைகள் களமாடி வருகிறது.
அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் வலிமையாக வேண்டும். இந்த வலிமை சிறுத்தைகள் பேரியக்கத்துக்கானது மட்டுமல்ல; மக்களுக்கானது! தமிழ்நாட்டுக்கானது. தமிழ்த் தேசிய இனத்திற்கானது.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைப்பது தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக என்னும் புரிதல் கட்சி கடந்து- சாதி- மதம் கடந்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஏற்பிசைவு, தொல்காப்பியன் திருமாவளவனின் அயராத உழைப்பும் முதிர்ச்சியான அணுகுமுறையும் தான். முதிர்ச்சி எப்போதும் ஏமாளித்தனமாகாது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு முன்பு கட்சி ஆரம்பித்த பலர்
இன்று கட்சியின் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் இன்று தேர்தல் அங்கீகாரம் பெற்று பானை சின்னத்தை பெற்றிருப்பதற்கு திருமாவளவன் என்னும் தேர்தல் வியூக வகுப்பாளரால் மட்டுமே இது சாத்தியமானது.
2026 ஆம் ஆண்டுக்கான இந்த தேர்தலிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்டாயம் கூடுதல் தொகுதி பெற்று கூடுதல் வலிமை பெறுவோம். இத்தகைய எதிர்பார்ப்பு சூழலில் தான்
இன்று மாலை 3 மணிக்கு சிறுத்தைகளின் உயர் நிலைக்கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் புறக்கணிப்பு
பாதையிலிருந்து வந்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் என்னும் பேரியக்கம். இது- மற்றுமோர் அரசியல் கட்சி அல்ல;
விடுதலைக்கான இயக்கம். அத்தகைய விடுதலைக்களத்தில்
எம்மை வழி நடத்தும் மகத்தான போராளித்தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனின் முன்னெடுக்கும்
எந்த முடிவையும் ஏற்று நடைமுறைப்படுத்துவோம்! சனாதனத்தை வீழ்த்துவோம்! இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
