புதுச்சேரியில் நாளும் நடக்கும் கட்சி தாவல்களை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில்தான் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிக அளவில் கட்சித் தாவல்கள் நடந்துள்ளன.
புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கர். பாஜகவில் இருந்த சிவசங்கர், 2021-ல் உழவர்கரை தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் அத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயித்தார்.
ஆனாலும் பாஜக ஆதரவாளராகவே இருந்து வந்தார். அண்மையில் லாட்டரி மார்ட்டின் மகன் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சியை ஆதரித்து பேசவும் தொடங்கினார். அக்கட்சியின் சார்பில் உழவர்கரை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார் சிவசங்கர். ஆனால் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள்தான் கிடைத்தன. இதனால் அக்கட்சியில் வேட்பாளராக முடியாத ஏமாற்றம் சிவசங்கருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று திடீரென காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துவிட்டார் சிவசங்கர். உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சிவசங்கர் போட்டியிடக் கூடும்.
இன்னொருவர் வையாபுரி மணிகண்டன். முத்தியால்பேட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. புதுச்சேரி யூனியன் பிரதேச அதிமுக முன்னாள் துணை செயலாளர். 2016-ல் முத்தியால்பேட்டை தொகுதியில் வென்றவர். 2021-ல் அதே முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இம்முறையும் முத்தியால்பேட்டைக்கு குறி வைத்திருந்தார். ஆனால் அதிமுக, இவருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைந்துவிட்டார் வையாபுரி மணிகண்டன்.
அதேபோல புதுவை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி. இவரது அண்ணன் மகன் மோகன்தாஸ், காங்கிரஸ் செயலாளர். ஏம்பலம் தொகுதியை குறிவைத்த மோகன்தாஸுக்கு அத்தொகுதி மறுக்கப்பட்டுவிட்டதாம். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு என்.ஆர். காங்கிரஸுக்கு தாவிவிட்டார்.
புதியதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ், அந்த கட்சியை விட்டு வெளியேறி தவெகவில் இணைந்தார். வில்லியனூர் தொகுதி தவெக வேட்பாளராகிவிட்டார் பூக்கடை ரமேஷ்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று இரவு வெளியிட்ட 30 வேட்பாளர்களில் 2 பேர் சிட்டிங் எம்.எல்.ஏக்கள், 4 பேர் முன்னாள் எம்.எல்.ஏக்கள். தவெகவுக்கு கட்சி தாவியவர்களில் பலர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார், பாஜகவில் இருந்து விலகி நேற்றுதான் தவெகவில் இணைந்தார். அன்றே அவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். ஊசுடு தொகுதியில் அவர் களம் காண்கிறார். மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமு, நேற்று முன்தினம் வரை பாஜகவில் இருந்தார்.. நேற்று இரவு தவெக வேட்பாளரானார். திரைப்பட காமெடி காட்சியில், ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என கவுண்டமணி பேசும் வசனம் மெய்ப்பிக்கப்படுகிறது!
