கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கைதை கண்டித்து இன்று (ஆகஸ்ட் 2) கோவையில் துறவியர் பேரவையினர் அமைதி வழியில மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத மாற்றம் செய்ய முயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட துறவியர் பேரவை சார்பாக கவன ஈர்ப்பு மனித சங்கிலி நடைபெற்றது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில்,தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ.அருண் மற்றும் ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நூற்றுக்கணக்கானர் கலந்து கொண்டு ‘எங்கள் மௌன பேரணி நம்பிக்கையின் அடையாளம்’, ‘குற்றமற்ற சகோதரிகளை விடுதலை செய்யுங்கள்’, போன்ற வாசகங்கள் ஏந்திய பதாகைகளை ஏந்தி நின்றனர்.
முன்னதாக மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ.அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக கேரளாவைச் சேர்ந்த மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மீதான கும்பல் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை அடுத்து தற்போது அரசே கைது செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது” என தெரிவித்தார்.