ஜெயலலிதா பிறந்த நாள்.. மோடி, இபிஎஸ் புகழாரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Modi and jayalalitha

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடன், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களால் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களால் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன். அவரைப் பற்றி இந்த மாத Mann Ki Baat நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள். ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்.

ADVERTISEMENT

பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “அம்மா அவர்களின் 78ஆவது பிறந்தநாளில், அம்மாவின் நெடும் புகழைப் போற்றுகிறோம். ‘அம்மா’ எங்களின் அடையாளம்… ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை; மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது. அம்மாவின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், ‘Poverty Alleviation’ -க்கான Global standards-ஐ நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்கப் போராடிய தலைவர்.

ADVERTISEMENT

We take a leaf out of your book in all of our actions for the people Amma.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று அம்மா சொன்னதைப் போல, அதிமுக என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.’எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்’ என்று நம் அம்மா சூளுரைத்தார்.அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் அம்மாவின் பிறந்தநாள்.

அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க.-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து, கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்தநாளில் வீரசபதம் ஏற்போம்.

‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’வாழ்க எம்.ஜி.ஆரின் புகழ்!
வளர்க அம்மாவின் பெரும் புகழ்!
வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!” எனத் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் அம்மாவின் பிறந்த தினம் இன்று.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட அம்மாவையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share