அரசின் வசம் இருக்கக்கூடிய மலை போன்ற மணல் கிடங்கை அநியாய விலைக்கு தனியார் மணல் முதலாளிகள் விற்பனை செய்ய முயற்சிகளை ஆரம்பித்து விட்டார்கள். நேற்று அமாவாசையன்று பூஜையும் போட்டு விட்டார்கள். mkstalin will takeover the sand mountain
இதை தடுத்து நிறுத்தி மணல் தட்டுப்பாடு மிகுந்த இந்த சமயத்தில் அந்த மணல் மலையை அரசே நியாயமான விலைக்கு மக்களுக்கு விற்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர் சங்கத்திடமிருந்து நமக்கு கோரிக்கைகள் வந்தன.
என்ன ஏதென விசாரிக்க ஆரம்பித்தோம்.
நம்மிடம் பேசினார் விழுப்புரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க தலைவர் சங்கர்.

“ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட வள்ளி மேடு, இளையனு வேலூர், குருபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் லட்சக்கணக்கான யூனிட் மணல் எந்த விதமான அரசு விதிகளையும் மதிக்காமல் கோவையைச் சேர்ந்த பழனிசாமி என்பவரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த சட்ட விரோத செயல்பாடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூந்தமல்லி வட்டார லாரி உரிமையாளர் சங்கத்தினர் 2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் 2013 செப்டம்பர் 19ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு உடனடியாக இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்பு மேல்முறையீடு செய்தது.
’உரிமம் இல்லாமல் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் எம் பழனிசாமி என்ற ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி மணிக்குமார் அந்த கோரிக்கையை தாண்டிச் சென்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும். வெறும் யூகங்களின் அடிப்படையில் அல்ல. லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் சிபிஐ விசாரணையே கேட்காத போது ரிட் மனுவை பொதுநல மனுவாக விசாரித்து நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. மாநில அரசின் விசாரணை அமைப்புகள் சரியாக செயல்பட்டு வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. தனி நீதிபதி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் சிபிஐ விசாரணை உத்தரவிட முடியாது’ என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். கே. அகர்வால் மற்றும் நீதிபதி எம் சத்திய நாராயணன் ஆகியோர் நீதிபதி மணிக்குமார் உத்தரவின் முக்கியமான பகுதியான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தனர்.
இதையடுத்து அந்த பகுதிகளில் முறைகேடாக குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் யூனிட் மணல் மாவட்ட நிர்வாகத்தால் கையில் எடுக்கப்பட்டது. அப்போது மணல் பிசினசை மேற்கொண்டு வந்த ஆறுமுகசாமியிடம் இருந்து ஒட்டுமொத்தமாக அந்த பிசினசை பறித்தார் ஜெயலலிதா.
கிட்டத்தட்ட 12 வருட காலத்தில் வள்ளிமேடு, குருபுரம் ஆகிய பகுதிகளில் இருந்த மணல் அரசால் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இளையனு வேலூர் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த மணல் அப்படியே இருந்தது. பல சட்ட நடைமுறைகளுக்கு பின்பு அதை விற்பனை செய்வதற்கு தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் யூனிட் அளவுள்ள அந்த மணல் மலையை விற்பனை செய்வது தொடர்பாகத்தான்… கடந்த மார்ச் 26 ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் மணல் தொழிலில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை கரிகாலன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து அந்தக் கூட்டத்தில் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ‘இளையனு வேலூர் பகுதியில் இருக்கும் அந்த மணல் மலையை, அரசிடம் இருந்து வாங்கி, தான் விற்க போவதாகவும், ஒரு யூனிட் மணல் 7000 ரூபாய் வரை விற்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசு பறிமுதல் செய்த மணலை தனிநபர் எப்படி விற்பனை செய்ய முடியும்? மேலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மக்கள் மணல் கிடைக்காமல் தரமற்ற எம் சான்ட் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் அரசிடம் மணல் பெறுவதற்காக 750 லாரிகள் புக்கிங் செய்து காத்திருக்கிறோம்.
அவர்களுக்கு அரசே நிர்ணயித்த ஒரு யூனிட் விலை 2650 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யலாம்.
இளையனு வேலூர் பகுதியில் சுமார் 82,000 யூனிட் மணல் இருப்பதாக தெரிகிறது. இதை ஒரு யூனிட்டுக்கு 2650 ரூபாய் என்று விலைக்கு அரசாங்கமே விற்றால் அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும்.

மேலும் மேற்படி மணலை லோடிங் செய்ய ஒரு யூனிட்டுக்கு 200 மட்டுமே அரசுக்கு செலவாகும்.
இதனால் மக்களுக்கும் மணல் நியாயமான விலையில் கிடைக்கும்.
ஆனால் இதில் கரிகாலன் தலையிட்டு ஒரு யூனிட் மணல் 7000 ரூபாய்க்கு தருவதாக லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதோடு மக்களுக்கும் பெரும் சுமை ஏற்படும். 7000 ரூபாய்க்கு ஒரு யூனிட் மணலை லாரி உரிமையாளர்கள் வாங்கினால், டிரான்ஸ்போர்ட் செலவு கூலி உள்ளிட்ட செலவுகள் எல்லாம் சேர்த்து மக்களிடம் விற்பனைக்குச் செல்லும்போது ஒரு யூனிட் மணல் கிட்டத்தட்ட 20,000 ரூபாய்க்கு சென்று விடும்.
எனவே இதில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசே ஏற்கனவே ஆன்லைன் புக்கிங் செய்து காத்திருக்கும் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் இந்த மணலை வழங்க வேண்டும்.

’ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்?’ என அந்த கூட்டத்தில் கேட்டபோது அதற்கு கரிகாலன் சொன்ன பதில் தான் அதிர்ச்சிகரமாக இருந்தது. ”எல்லா இடங்களுக்கும் அதிகமாக கொடுக்க வேண்டியிருப்பதால் தான் இவ்வளவு விலை வைக்க வேண்டி இருக்கிறது என்று கூறினார்” என அந்தக் கூட்டத்தில் நடந்ததை நம்மிடம் தெரிவித்தார் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கர்.
மேலும் லாரி உரிமையாளர்கள் சங்க வாட்ஸ் அப் குரூப் களிலும் இது பற்றி மிக வெளிப்படையாக வேதனையாக கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார் சங்கர்.
12 வருடங்களாக மலை போல் குவிந்து கிடக்கும் அந்த மணலை, மக்களுக்கு அரசு நிர்ணயித்த நியாயமான விலையில் கொண்டு சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பதுதான் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் பெரும் எதிர்பார்ப்பு. மணல் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு!