”கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள் தனமான கட்டுக்கதைகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். mkstalin fiery speech against governor rn ravi
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கில் சாதகமான தீா்ப்பைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் ’மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு’ விழா இன்று (மே 3) மாலை நடைபெற்றது.
பல்கலைக்கழகங்கள், அரசு மற்று தனியார் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் திராவிடா் கழகத் தலைவரும், பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான கி.வீரமணி தலைமை வகித்தார். உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் முன்னிலை வகித்தார்.

மக்கள் தான் உண்மையான நாயகர்கள்!
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “இந்த பாராட்டு விழாவால் மக்களுக்காக இன்னும் கடுமையாக போராட வேண்டும் என்று எண்ணம் எழுகிறது. விழா அழைப்பிதழில் என்னை ’மாநில சுயாட்சி நாயகர்’ என்று குறிப்பிட்டுள்ளனர். என்னை பொறுத்தவரை திமுகவிற்கு வாக்களித்தால் சமூக நீதி ஆட்சியாக, மாநில சுயாட்சிக்காக போராடுவார் என நம்பி வாக்களித்த மக்கள் தான் உண்மையான மாநில சுயாட்சி நாயகர்கள்.
என்னை பொறுத்தவரை வெற்றி என்பது டீம் வொர்க். இதனால் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தினோம்.
பொதுவாக பாராட்டு விழா என்று யாராவது கேட்டால் நான் நேரம் அளிக்க மாட்டேன். ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி. எனவே தான் இன்று நடைபெறும் பாராட்டு விழாவிற்கு நான் ஒப்புதல் அளித்தேன்.
ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம்!
முதல்வராகி மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினால், மத்திய அரசின் ஏஜெண்டாக உள்ள ஆளுநர் திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? ஆளுநர் பதவி என்பது எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போன்றது.
கல்வி நிலையங்கள் இருப்பது மாநில அரசின் இடத்தில். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பது மாநில அரசு. மாணவர்களுக்கு வசதிகள் செய்து தருவது மாநில அரசு. ஆனால் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் ஆளுநருக்கு என்றால் எந்தவிதத்தில் நியாயம்?
அதனால் தான் உச்சநீதிமன்றம் சென்றோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சட்டத்தின் வழி நின்று தீர்ப்பு மூலம் பூனைக்கு மணி கட்டியுள்ளனர். சட்டமன்றம் அளிக்கக் கூடிய மசோதா மீது ஒரு மசோதா ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர். ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது இந்த வழக்கின் மிகப்பெரிய வெற்றி. இப்படி ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை ஜனாதிபதி எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பாரா?
நாங்கள் ஆளுநருடன் அதிகாரப் போட்டி நடத்தவில்லை; ஆளுநருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பகை இல்லை. சமீபத்தில் கூட ஆளுநர் மாளிகைக்கு சென்றேன். அரசியலில் கொள்கை மாறுபாடு இருந்தாலும், மனிதர்களுக்குள் நட்புறவு, பண்பாடு காக்கப்பட வேண்டும். நமது மாநில உரிமையை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுதான் என்னுடைய பாலிசி. என்னைக் கேட்டால் இதே ஆளுநர் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ரோல் மாடலை சமூக ஊடகங்களில் தேடாதீர்கள்!
இந்தியாவில் சிறந்த நூறு கல்வி நிலையங்களில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. நாம் உலகத்துடன் போட்டி போட வேண்டும். அதற்கு இளைஞர்கள் இன்னும் வளர வேண்டும். இளைஞர்களுக்கான அரசு திமுக. ஏற்கெனவே நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், கல்லூரி கனவு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
நமக்கான உரிமைகளை மீட்டு உங்களை படிக்க வைப்பது அரசின் கடமை. உலகம் மிகப்பெரியது. அதை நீங்கள் பார்க்க கல்வி என்னும் கண்ணாடியை போட்டுக்கொள்ளுங்கள். வாய்ப்பு, கல்வியை பயன்படுத்தி குடும்பம், நாட்டுக்கு பெருமை சேர்ப்பது மாணவர்களாகிய உங்களின் கடமை.
மாணவர்களை படிக்க விடக் கூடாது என புதிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம் என பலவகை சதி செய்கிறது மத்திய அரசு.
உங்கள் ரோல் மாடலை சமூக ஊடகங்களில் தேடாதீர்கள்; அது பொழுதுபோக்குக்கான தளம் மட்டுமே. கல்வி முக்கியம் இல்லை என கூறுவோரை உங்கள் வாழ்க்கையில் இருந்து சைலண்டாக அகற்றி விடுங்கள். விதிவிலக்குகள் எப்போதும் விதியாகாது. அனைத்துக்கும் கல்வி தான் அடிப்படை. கல்விதான் உங்கள் சொத்து. இதை இன்னும் நூறு முறை கூட சொல்வேன்.
ஸ்டாலின் எச்சரிக்கை!
கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள் தனமான கட்டுக்கதைகளை, மூட நம்பிக்கைகளை பரப்புகிற இடமாக கல்விக் கூடங்கள் இருக்கவே கூடாது.
அங்கு ரெண்டே அஜெண்டாதான் இருக்கணும். ஒன்னு Scientific Approach, Social Justice. அதாவது அறிவியல் சார்ந்த கல்வியுடன் சமூக நீதி ஒதுக்கீடு வரலாற்றை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இதற்கு எதிராக ஏதாவது நடந்தால் அரசின் ரியாக்ஷன் கடுமையாக இருக்கும்” என்ற எச்சரிக்கையுடன் தனது பேச்சை முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.