மூன்று நாள் பயணமாக சென்னை வந்த பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, கடைசி நாள் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. pay respect to jayalalitha
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மே 2-ஆம் தேதி இரவு சென்னை வந்தார். அவருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று (மே 3) காலை 8 மணிக்கு சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் தனியார் ஹோட்டலில் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா, “கூட்டணி தொடர்பாக நீங்கள் எதுவும் பொதுவெளியில் பேச வேண்டாம். டெல்லி தலைமை அதனை பார்த்துக்கொள்ளும். அதிமுக நம்முடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தார்கள். அதனால் நாமும் கூட்டணியை உறுதி செய்திருக்கிறோம்.
அதிமுக நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து செயலாற்றுங்கள். தேர்தலுக்கு மிகவும் பலம் வாய்ந்தது பூத் கமிட்டி தான். அதனால், பூத் கமிட்டியில் கவனம் செலுத்துங்கள்.

கட்சிக்குள் கோஷ்டி பூசலை தவிருங்கள். கட்சியை வளர்ப்பதற்கு பாடுபடுங்கள். தேர்தலுக்கு இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது. 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, இன்று முதல் தீவிரமாக பணியைத் தொடருங்கள். அனைத்து தொகுதிகளிலும் நாம் தான் போட்டியிடுகிறோம் என்று நினைத்து பணியாற்றுங்கள்” என்று பேசியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு பொத்தேரி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டில் நட்டா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பாஜக நிறுவன கூட்டத்தில் (organizational meeting) நட்டா கலந்துகொள்வதாக நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திடீர் பயணமாக சைவ சித்தாந்த மாநாடு முடிந்ததும் வேலூர் தங்ககோவிலுக்கு புறப்பட்டார்.

வேலூர் திருமலைக்கோடியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கிருந்து 400 அடி வெளிவட்ட சாலை வழியாக சென்னை நோக்கி திரும்பினார்.
மாலை 7.30 மணியளவில் சோமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வரதராஜபுரம் அருகே நட்டாவின் வாகனம் சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அவரது கார் பழுதடைந்து நின்றது.

இதனால் நட்டா வாகனத்திற்கு பின்னால் வந்த அவரது பி.ஏ-வின் இன்னோவா கார் (TN25EF9691) மீது மற்றொரு எஸ்காட் கார் (TN01G 8923) உரசியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக, நட்டா வேறொரு வாகனத்தில் ஏறி சென்றார். இந்த விபத்து தொடர்பாக சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர்.
கோவிலுக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட இந்த திடீர் விபத்தால் மன நெருடலால் மீண்டும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம், நேரடியாக விமான நிலையம் செல்லுங்கள் என்றார் நட்டா. அதன்படி, நேற்று இரவே சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார்.

இதனால் மே 4-ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாக திட்டம் இருந்தது. மாலை 3.40-க்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து 6E 6158 விமானத்தில் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இந்த பயணத்தையெல்லாம் ரத்து செய்துவிட்டு திடீரென நட்டா ஒரு நாள் முன்பாகவே டெல்லி சென்றிருப்பது பாஜக, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. pay respect to jayalalitha
