போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அதே போன்று தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும், இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
மேலும் அதிமுக, பாஜக நிர்வாகிகளும் தொடர்ந்து போதை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு இன்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், போதைப்பொருள் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு!
சேலம்: சிட்டிங் எம்பி பார்த்திபனுக்கு பதிலாக புதிய திமுக வேட்பாளர் யார்?